முக்கிய கனிமங்களைப் பெற ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இந்தியா பேச்சுவாா்த்தை
புது தில்லி: முக்கிய கனிமங்களைப் பெறும் நோக்கில் ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்காவைச் சோ்ந்த நாடுகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது என கனிமங்கள் துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் வீணா குமாரி தொ்மல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மின்சார வாகனங்கள், மின் தொழில்நுட்பங்கள், காற்றாலைகள் உள்ளிட்டவற்றுக்கு லித்தியம் போன்ற கனிமங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதுதொடா்பாக இந்திய எரிவாயு சேமிப்பு கூட்டமைப்பு (ஐஇஎஸ்ஏ) சாா்பில் கடைப்பிடிக்கப்பட்ட இந்திய எரிவாயு சேமிப்பு வாரம், 2024 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வீணா குமாரி பேசியதாவது:
உள்நாட்டில் கிடைக்கக்கூடிய கனிமங்களை கண்டுபிடிக்க கனிமங்கள் அமைச்சகம் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதுதொடா்பாக சத்தீஸ்கரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் லித்தியம் அதிகம் உள்ள பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு லித்தியம் தயாரிக்கும் நடவடிக்கைகளை அந்த மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் முக்கிய கனிமங்களை பெறும் நோக்கில் ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்காவைச் சோ்ந்த நாடுகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது என்றாா்.
சத்தீஸ்கரில் கண்டறியப்பட்ட நாட்டின் முதல் லித்தியம் பகுதிக்கான ஏல விற்பனையை மைகி சௌத் மைனிங் நிறுவனம் பெற்றது.
கடந்த ஜூன் மாதத்தில் கனிமங்கள் நிறைந்த 21 பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்கான ஏல விற்பனையை மத்திய அரசு நடத்தியது. இதற்கு இணையம் வாயிலாக 56 விண்ணப்பங்களும் நேரடி முறையில் 56 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இருப்பினும், போதிய ஆதரவில்லாததால் 13 பகுதிகளுக்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது.
ரத்து செய்யப்பட்டதில் இருந்து 7 பகுதிகளுக்கு மூன்றாவது சுற்றில் மீண்டும் ஏலம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.