
கேரளத்தில் அசுத்தமான நீரில் காணப்படும் அமீபாவால் ஏற்படும் அரிய மூளைத் தொற்றான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸுக்கு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன், தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தான்.
14 வயதான மிருதுல் புதன்கிழமை இரவு 11.20 மணியளவில் இறந்ததாக கேரள மாநில சுகாதாரத் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கேரளத்தில் மே மாதத்திற்குப் பிறகு இவ்வகையான நோய்த்தொற்று மூலம் பலியாவது இது மூன்றாவது நிகழ்வாகும்.
மலப்புரத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி மே 21 அன்று புதியவகை அமீபா தொற்றால் பலியானார். இரண்டாவதாக கண்ணூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஜூன் 25 ஆம் தேதி இறந்தார்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “இங்குள்ள சிறிய குளத்தில் குழந்தை குளித்தாகவும், அங்கிருந்து நோய்த் தொற்று பரவியிருக்கலாம், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.
அசுத்தமான நீரில் இருந்து மூக்கு வழியாக ஒட்டுண்ணி அல்லாத அமீபா பாக்டீரியாக்கள் உடலில் நுழையும் போது தொற்று ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்னும் மூளைக்காய்ச்சலுக்கு எதிராக மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
2017, 2023 ஆம் ஆண்டுகளில் ஆலப்புழா மாவட்டத்திலும் இந்த வகையான நோய்த் தொற்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.