
சுகப்பிரசவத்தினால் தாய் - சேய் என இருவருக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன. மகப்பேறுக்குப் பிறகு உடல்நிலை தேறும் திறன் விரைவாக நடக்கும் என்று மருத்துவர்கள் கூறிவரும் நிலையில், அண்மைக் காலமாக கர்ப்பிணிகள் இயற்கை பிரசவ முறையை அதிகம் விரும்புகிறார்கள் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
கர்ப்பிணிகள் தங்களது பிரசவக் காலத்தின் மீதான கட்டுப்பாட்டை தாங்களே தீர்மானிக்கவும், பாரம்பரிய பழக்க வழக்கத்தை மீட்டெடுக்கவும், தங்களது மகப்பேறு அனுபவத்தை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளவும் விரும்புவதே இந்த மன மாற்றத்துக்குக் காரணமாக கூறப்படுகிறது.
அண்மைக் காலமாக குழந்தைப் பிறப்பு என்பது, நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தை அடைந்து வருகிறது, அந்த வகையில் தற்போது இயற்கை பிரசவ முறையில் குழந்தைப் பெற்றுக்கொள்வதை அதிக பெண்கள் விரும்புகிறார்கள்.
இதன் காரணமாக, மருத்துவமனைகளிலேயே கூடுதலாக இந்த வசதி இருப்பதோடு அல்லாமல், இப்போது நாடு முழுவதும் இயற்கையான முறையில் குழந்தைப் பேறுக்கு உதவும் மையங்கள் அதிகரித்துள்ளன. அதில், தண்ணீரில் குழந்தைப்பேறு, கயிறு, அக்குபங்சர் முறை உள்ளிட்டவையும் அடங்குகிறது.
இயற்கை முறை என்றால்?
பெங்களூருவைச் சேர்ந்த மதர்ஹூட் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் சிரீஷா ரெட்டி இது பற்றி கூறுகையில், மருந்து, மாத்திரை, மயக்க ஊசி அல்லது வலியில்லாமல் இருக்கும் மருந்துகளைப் பயன்படுத்தாமல், ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, தளர்வாக வைப்பதற்கான நுட்பங்கள், பிரசவ வலி நேரிடும்போது தண்ணீருக்குள் மூழ்கியிருப்பது போன்றவற்றின் மூலம் குழந்தைப்பேறு மேற்கொள்வதாகும்.
இந்த இயற்கை பிரசவ முறையில் கணவரும், கர்ப்பிணிக்கு துணையிருக்கும் வகையில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
இயற்கையான முறையில் அமைவதுதான் குழந்தைப் பிறப்பு என்பதை கர்ப்பிணி உணர்வதன் மூலமும், குழந்தைப்பிறப்பை ஒரு நேர்மறையான அனுபவமாக மாற்றும் வகையிலும் இது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முறை மகப்பேறு மையங்களிலும், சில மருத்துவமனைகளிலும் கொண்டு வரப்பட்டுள்ளன என்கிறார்.
இந்த இயற்கையான முறை மகப்பேறு சிகிச்சைக்கு ஒன்றுதான் மிகவும் முக்கியம். அதாவது, ஒரு கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் ஆகும் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே, இந்த இயற்கை பிரசவ முறையைக் கையாளலாம். இதில் குழந்தை மற்றும் கர்ப்பிணியின் உடல்நிலை மிகவும் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கப்படுகிறது.
குணமடைதலில் விரைவு
மகப்பேறு மருத்துவர்கள் இதுபற்றி கூறுகையில், தாய் மற்றும் குழந்தை என இருவருக்குமே இந்த இயற்கை முறை சுகப்பிரசவம் பல நன்மைகளை பயக்கும். பிரசவக் காலத்திலிருந்து மிக விரைவாக குணமடையவும் உதவும். பிரசவக் காலத்தில் ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்கவே சிசேரியன் முறை பயன்படுத்தப்படுகிறது. குழந்தைப் பேறின்போது மருந்து மற்றும் அறுவைசிகிச்சை மேற்கொள்ளாத தாய்மார்கள் மிக விரைவாகக் குணமடைதலை பெறுகிறார்கள். எனவே ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, ஹைட்ரோதெரபி, அக்குபங்சர் முறை போன்றவற்றின் மூலம் மருந்துகள் இன்றி வலியைக் குறைக்கும் வழிமுறைகள் இதில் உள்ளன.
அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளை விடவும், இயற்கை முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறந்ததும் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதில்லை என்கிறார் டாக்டர் ரெட்டி.
இயற்கை மருத்துவத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளும் கர்ப்பிணிகள், மிக அமைதியான, சந்தோஷமான மகப்பேறு அனுபவத்தைப் பெறுகின்றனர். மேலும், குழந்தை பிறந்ததும், குழந்தையை தாய் மீது கிடத்தி, தாய்க்கும் சேய்க்குமான பிணைப்பை அதிகரிக்கும்போது அது அவர்களது மகிழ்ச்சியை அதிகரிக்கிறது என்கிறார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை மகப்பேறு மருத்துவரும், மருத்துவ ஆலோசகருமான டாக்டர் என். சப்னா லல்லா.
இதற்கென விதிமுறைகளும் உண்டு
கர்ப்பிணிகளுக்கு இது ஒரு நல்ல அனுபவத்தைக்கொடுத்தாலும் கூட, இயற்கை பிரசவ முறையை தேர்வு செய்யும் கர்ப்பிணிகளுக்கு சில விதிமுறைகள் கட்டாயம். மருத்துவர்கள் அனைத்து விதமான மருத்துவ சோதனைகளையும் செய்து, ஒரு கர்ப்பிணி இயற்கை முறைக்கு உரியவரா, பிரசவத்தின்போது எந்த சிக்கலும் எழாதா? என்பது மட்டுமல்லாமல், சின்ன சின்ன பிரச்னைகள் மட்டுமே எழலாம் என்று உறுதி செய்யப்பட வேண்டும். அதாவது, கர்ப்பிணிகளுக்கு, கர்ப்ப காலத்தில் ஹைப்பர்டென்ஷன், நீரிழிவு, நஞ்சுக்கொடி பிரிதல் போன்ற பிரச்னைகளை சந்திக்காமல் இருந்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், கர்ப்பிணியின் வயது, உடல் அமைப்பு, பெண்ணின் உடல்நலன், ஆரோக்கியம் போன்றவையும் கணக்கிடப்பட்டு இயற்கை பிரசவ முறைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
ஒருவேளை, நீரிழிவு மற்றும் கருப்பைக் கட்டிகள் இருந்த கர்ப்பிணியாக இருந்தால் கூடுதல் கவனத்துடன் இயற்கை முறையில் குழந்தைப் பேறுக்கு முயற்சிக்கலாம் என்கிறார் டாக்டர் ரெட்டி.
கர்ப்பிணி மட்டுமல்லாமல் கருப்பையில் இருக்கும் குழந்தையும் இயற்கை முறை குழந்தைப்பேற்றுக்கு தகுதியாக இருக்க வேண்டும். கருப்பையில் குழந்தை இருக்கும் நிலைமை முக்கியத்துவம் பெறுகிறது. பேறுகாலம் முழுமையடைந்து, குழந்தையின் தலை சுகப்பிரசவத்துக்கு தயார் நிலையில் இருப்பது போன்று கீழ்முகமாக இருக்க வேண்டும் என்கிறார் தில்லி மருத்துவமனை மகப்பேறு துறை இயக்குநர் டாக்டர் ஜூஹி ஜெயின்.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்வதன் மூலம், அபாயம் ஏற்படுவதைக் குறைத்து திடீரென சிசேரியன் செல்லும் நிலை தவிர்க்கப்படும் என்கிறார்.
"சிசேரியன் மூலம் குழந்தைப்பேறு அடைவதில் மக்கள் இடையே தேவையற்ற குழப்பங்கள் உள்ளது, ஆனால் அதில் உண்மையில் இல்லை. தற்போதைய காலகட்டத்தில், வாழ்க்கை முறை கோளாறுகளால் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இயற்கையான பிரசவத்தை சுகப் பிரசவம் போல அவ்வளவு எளிதாக யாராலும் நினைக்க முடியாது. சுகப் பிரசவம் என்பது தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருப்பதுதானே தவிர, பிரசவ முறையால் அதனை சுகப்பிரசவம் என்று வரையறுக்கக்கூடாது, எனவே, இயற்கை முறையில் பிரசவம் பார்ப்பதில் தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதில்லை என்கிறார் மருத்துவர்.
100 சதவீதம் பாதுகாப்பானதா?
இயற்கையான பிரசவ முறை என்பது கர்ப்பிணிகளுக்கு மிகுந்த சௌகரியமான மற்றும் இயற்கையான பிரசவ கால அனுபவத்தைக் கொடுத்தாலும், இந்த முறையில் சில அபாயங்கள் இருக்கத்தான் செய்கிறது. இந்த முறை ஒருவேளை பாதுகாப்பானதாகக் கூட இருக்கலாம், ஆனால், அதை உறுதிப்பட எல்லாவற்றுக்கும் ஒன்றாக சேர்த்து சொல்லிவிட முடியாது என்கிறார் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் ஆஸ்தா தயால். ஒரு மகப்பேறு மருத்துவத்தைப் பொருத்தவரை, சிறிய பிரச்னை, பிரசவத்தில் எப்போதுவேண்டுமானாலும் மிகப்பெரிய பிரச்னையாக மாறலாம் என்கிறார். மருத்துவ சிகிச்சை எப்போது வேண்டுமானாலும் தேவைப்படலாம். மருந்து, சிகிச்சையை விரும்பாத கர்பிணிகள், ஆரோக்கியமாக இருந்து, பெரிய பிரச்னைகள் இல்லாமல் இருந்தால் இயற்கை பிரசவ முறை மூலம் நல்ல அனுபவத்தைப் பெறலாம், ஆனால், நீரில் குழந்தைப் பேறு முறையை முயலும்போது, குழந்தையின் மூக்கு, வாய் போன்றவற்றில் தண்ணீர் நுழைந்து அதன் மூலம் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் கூட இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த இயற்கை முறை பிரசவங்கள் அனைத்துமே, உரிய மருத்துவக் கண்காணிப்பாளரின் மேற்பார்வையிலும், ஏதேனும் அவசரம் என்றால் உடனடியாக சிகிச்சை கிடைக்க ஏதுவாக மருத்துவமனையின் அனைத்து வசதிகளும் கொண்ட ஓரிடத்தில்தான் நடைபெற வேண்டும். கர்ப்பிணியின் ஆரோக்கியம், சுகப்பிரசவத்துக்கான உறுதி தன்மை என அனைத்தும் முழுமையாக சொல்லப்பட்ட வழிகாட்டுதல்களுடன் பின்பற்றப்பட வேண்டும். ஒரு மகப்பேறு மருத்துவர்கள், இயற்கை பிரசவ முறையின்போது கர்ப்பிணியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், பாதுகாப்புதான் மிக முக்கியம், இதனை மேற்கொள்ளும் குழுவும் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும், ஆனால், இப்போதெல்லாம் பல இடங்களில் காளான்கள் போல இயற்கை பிரசவ முறை மையங்கள் திறக்கப்படுகின்றன. இதில் இருக்கும் பணியாளர்களின் அனுபவங்கள் மற்றும் உரிய பயிற்சி பெற்றவர்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளன.
பிரசவத்தின்போது எந்த நேரத்திலும் சிக்கல் ஏற்படலாம். அவசரகாலத்தை எதிர்கொள்ள அனைத்து பணியாளர்களும் பயிற்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். இயற்கை பிரசவ முறையில், சிசுவை கண்காணிக்கும் அமைப்புகள் இருப்பதில்லை, மேலும், குழந்தைக்கு கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு கணக்கிடவும் வழிமுறை இல்லை. இதெல்லாம் இயற்கை பிரசவ முறையில் இருக்கும் சவால்கள் என்கிறார் டாக்டர் லல்லா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.