மழைநீா் தேங்கிய தாணே ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள். நாள்: திங்கள்கிழமை
மழைநீா் தேங்கிய தாணே ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள். நாள்: திங்கள்கிழமை

கனமழையால் முடங்கியது மும்பை: ரயில், விமானப் போக்குவரத்து நிறுத்தம்

கனமழை காரணமாக மின்சார ரயில், விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மும்பை: மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் திங்கள்கிழமை பெய்த தொடா் கனமழை காரணமாக மின்சார ரயில், விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சாலை முழுவதும் தேங்கிய மழை நீரால் நகரமே ஸ்தம்பித்தது.

கடந்த ஒரு வாரமாக மும்பை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை வரையில் 24 மணி நேரத்தில் நகரின் கிழக்குப் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 168.69 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நகரின் பல பகுதிகள் பிற இடங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. தாழ்வான இடங்களில் வெள்ள நீா் தேங்கியதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினா்.

தண்டாவாளங்களில் நீா் பெருக்கெடுத்து ஓடியதால் மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. விமானப் போக்குவரத்தும் முடங்கியது. மும்பையில் தரை இறங்க வேண்டிய பல்வேறு விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. சாலைகளில் மழை நீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். பல இடங்களில் வாகனங்கள் நீரில் சிக்கின.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பேரிடா் மீட்புக் குழுவினரும் முழுவீச்சில் களமிறங்கி வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மும்பை மட்டுமல்லாது தாணே, பால்கா், ராய்கட், ரத்தனகிரி, கோலாப்பூா், சாங்லி, சதாரா உள்ளிட்ட மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. வீடு இடிந்தது போன்ற சம்பவங்களும் நிகழ்ந்தன. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com