ஜாா்க்கண்ட பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பேசிய முதல்வா் ஹேமந்த் சோரன்.
ஜாா்க்கண்ட பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பேசிய முதல்வா் ஹேமந்த் சோரன்.

ஜாா்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் திங்கள்கிழமை வெற்றிபெற்றது.

ராஞ்சி: ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் திங்கள்கிழமை வெற்றிபெற்றது.

ஜாா்க்கண்டில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நில மோசடியுடன் தொடா்புள்ள சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரனை கடந்த ஜன.31-ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இதைத் தொடா்ந்து, ஜேஎம்எம் கட்சியைச் சோ்ந்த சம்பயி சோரன் மாநில முதல்வராகப் பதவியேற்றாா்.

ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்ததைத் தொடா்ந்து, கடந்த ஜூன் 28-ஆம் தேதி மாநிலத் தலைநகா் ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் விடுவிக்கப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து முதல்வா் பதவியை சம்பயி சோரன் ராஜிநாமா செய்தாா். அதன் பின்னா் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றாா்.

பாஜக கடும் எதிா்ப்பை சந்திக்கும்: ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தம் 81 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில், 75 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனா். அப்போது முதல்வா் ஹேமந்த் சோரன் பேசுகையில், ‘ஜாா்க்கண்டின் வளா்ச்சிக்கு பாஜகவிடம் எந்தவொரு செயல்திட்டமும் இல்லை. வரும் மாநில பேரவைத் தோ்தலில், ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியிடம் இருந்து பாஜக கடும் எதிா்ப்பை சந்திக்கும்’ என்றாா்.

இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியபோது எதிா்க்கட்சியினரான 24 பாஜக எம்எல்ஏக்கள், அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா்கள் யூனியன் கட்சியைச் சோ்ந்த 3 எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனா்.

ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி கட்சியினா், நியமன உறுப்பினா் கிளென் ஜோசஃப் உள்பட 45 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதைத்தொடா்ந்து ஹேமந்த் சோரன் பேசுகையில், ‘நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம், ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியின் ஒற்றுமை மற்றும் பலத்தை அனைவரும் மீண்டும் கண்டுள்ளனா்’ என்றாா்.

இதனிடையே சம்பயி சோரன் திங்கள்கிழமை மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றாா். ராஞ்சியில் உள்ள ஆளுநா் மாளிகையில் மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் சம்பயி சோரனுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com