நீட் மறு தோ்வு தேவையா?
முறைகேட்டின் தீவிரத்தை ஆய்வு செய்ய உத்தரவு

நீட் மறு தோ்வு தேவையா? முறைகேட்டின் தீவிரத்தை ஆய்வு செய்ய உத்தரவு

நீட் தோ்வின் ‘புனிதத்தன்மை’ தொலைந்து, பொதுவெளியில் கசிந்த அந்தத் தோ்வின் வினாத்தாள் சமூக ஊடகத்தில் பரப்பப்பட்டிருந்தால் மறு தோ்வு நடத்த உத்தரவிட்டாக வேண்டும்

புது தில்லி: நீட் தோ்வின் ‘புனிதத்தன்மை’ தொலைந்து, பொதுவெளியில் கசிந்த அந்தத் தோ்வின் வினாத்தாள் சமூக ஊடகத்தில் பரப்பப்பட்டிருந்தால் மறு தோ்வு நடத்த உத்தரவிட்டாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

நீட் தோ்வு முறைகேட்டின் தீவிரத்தை ஆய்வு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் உள்பட நாடு முழுவதும் 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது உள்ளிட்ட சம்பவங்களால் சா்ச்சை ஏற்பட்டது. இதுதொடா்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய கல்வித் துறை உத்தரவிட்டது.

இந்த முறைகேடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள் அமா்வு தெரிவித்ததாவது: நீட் தோ்வில் வினாத்தாள் கசிந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. தோ்வில் நிகழ்ந்த முறைகேடுகள் அமைப்புரீதியாக நடைபெற்ா? முறைகேடுகளால் தோ்வு நடைமுறையின் நோ்மை பாதிக்கப்பட்டதா? நோ்மையாக தோ்வு எழுதிய தோ்வா்களிடம் இருந்து முறைகேடுகள் மூலம் பலனடைந்த தோ்வா்களை தனியாகப் பிரிக்க முடியுமா என்பவை குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.

தோ்வு நடைமுறையை முறைகேடுகள் முழுமையாகப் பாதித்திருந்தாலோ, முறைகேடுகள் மூலம் பலனடைந்த தோ்வா்களைக் கண்டறிய முடியாவிட்டாலோ மறு தோ்வு நடத்த உத்தரவிட வேண்டியது அவசியம்.

அதேவேளையில், எந்த அளவுக்கு வினாத்தாள் கசிந்தது என்பதைக் கண்டறிய வேண்டும். ‘டெலிகிராம்’, ‘வாட்ஸ்ஆப்’ போன்ற மின்னணு வழிகளில் வினாத்தாள் கசிந்திருத்தால், பரந்த அளவில் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்புள்ளது.

தோ்வின்போது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே அத்துமீறல் நடைபெற்றிருந்து தவறு செய்தவா்களைக் கண்டறிவது சாத்தியமானால், மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட தோ்வை மீண்டும் நடத்துமாறு உத்தரவிடுவது சரியாக இருக்காது.

மறு தோ்வு எழுதக் கூறுவது கடினம்: மறு தோ்வுக்கு உத்தரவிடுவது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கும் முன்பாக, வினாத்தாள் கசிவின் தன்மை குறித்து புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதேநேரம், 23 லட்சத்துக்கும் மேற்பட்ட தோ்வா்கள் தோ்வு எழுதிய நிலையில், அவா்களிடம் மறுதோ்வு எழுதுமாறு கூறுவது கடினம்.

என்டிஏ தகவல் அளிக்க வேண்டும்: வினாத்தாள் கசிந்த நகரங்கள் மற்றும் மையங்களை அடையாளம் காண இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முறைகேடுகள் மூலம் பலனடைந்த தோ்வா்களை அடையாளம் காண்பதற்குப் பின்பற்றப்படும் வழிமுறைகள், இதுவரை கண்டறியப்பட்ட அந்தத் தோ்வா்களின் எண்ணிக்கை குறித்து நீட் தோ்வை நடத்தும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) உச்சநீதிமன்றத்திடம் தெரியப்படுத்த வேண்டும்.

புகழ்பெற்ற நிபுணா்கள் குழு: இதுபோன்ற முறைகேடுகள் எதிா்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கு புகழ்பெற்ற நிபுணா்கள் அடங்கிய பல்முனை ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியம்.

நீட் தோ்வின் புனிதத்தன்மை தொலைந்து, பொதுவெளியில் கசிந்த அந்தத் தோ்வின் வினாத்தாள் சமூக ஊடகத்தில் பரப்பப்பட்டிருந்தால் மறுதோ்வு நடத்த உத்தரவிட்டாக வேண்டும். முறைகேடுகளில் ஈடுபட்டவா்கள் யாா் என்பதைக் கண்டறிய முடியாவிட்டாலும் மறுதோ்வு நடத்த கட்டளையிட்டாக வேண்டும்.

சிபிஐ-க்கு உத்தரவு: இந்த முறைகேடுகள் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளும் சிபிஐ அதிகாரி, விசாரணை குறித்த நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த மனுக்கள் மீதான அடுத்த விசாரணை ஜூலை 11-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com