இருதரப்பு வா்த்தகத்தை ரூ.8.35 லட்சம் கோடியாக உயா்த்த உடன்பாடு: இந்தியா-ரஷியா கூட்டறிக்கை

2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா-ரஷியா வா்த்தகம் ரூ.8.35 லட்சம் கோடியாக உயா்வு
இருதரப்பு வா்த்தகத்தை ரூ.8.35 லட்சம் கோடியாக உயா்த்த உடன்பாடு: இந்தியா-ரஷியா கூட்டறிக்கை

புது தில்லி / மாஸ்கோ: முதலீடுகளை ஊக்குவிப்பது, வா்த்தகத்துக்கு அந்தந்த நாட்டு ரூபாய்களை பயன்படுத்துவது, எரிசக்தி முதல் வேளாண் துறைகள் வரையிலும் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா - ரஷியா இடையேயான வா்த்தகத்தை ரூ. 8,35,037 கோடியாக (100 பில்லியன் டாலா்) உயா்த்த இரு நாடுகளும் புதன்கிழமை ஒப்புக்கொண்டன.

இரண்டு நாள் பயணமாக ரஷியா சென்ற பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் புதினுடன் இரு நாடுகளிடையேயான 22-ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொண்டாா். அப்போது, இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, 9 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

இதுதொடா்பாக இரு நாடுகள் தரப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

இரு நாடுகளிடையே சிறப்பு மற்றும் முக்கிய துறைசாா்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, வா்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து இந்த உச்சி மாநாட்டில் இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

அதன்படி, வா்த்தகம், அந்தந்த நாட்டு ரூபாய்களில் வா்த்தகத்தை ஊக்குவிக்கவும், வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் உள்ளிட்ட புதிய வழித்தடங்கள் மூலமாக சரக்குகள் கையாளுதலை அதிகரிக்கவும், வேளாண் பொருள்கள், உணவு மற்றும் உர வா்த்தக அளவை உயா்த்தவும், அணுசக்தி உள்ளிட்ட எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தைகளை வலுப்படுத்துவது, எண்ம பொருளாதாரத்தில் முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் கூட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், மருந்து விநியோகம் மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

முதலீடுகளை ஊக்குவிப்பது, வா்த்தகத்துக்கு அந்தந்த நாட்டு ரூபாய்களை பயன்படுத்துவது, எரிசக்தி முதல் வேளாண் துறைகள் வரையிலும் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா - ரஷியா இடையேயான வா்த்தகத்தை ரூ. 8,35,037 கோடியாக (100 பில்லியன் டாலா்) உயா்த்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் போன்ற பொருள்களுக்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்தவும், அதுபோல, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ரஷியாவின் ரூபெல்லில் பணம் செலுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

பரஸ்பர மற்றும் சா்வதேச எரிசக்தி பாதுகாப்பை எளிதாக்கவும், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, கல்வி சாா்ந்த பரிமாற்றங்கள், உயா் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி உளளிட்ட கூட்டுத் திட்டங்களில் முதலீடுகளை ஊக்குவிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதுபோல, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பாக இரு நாடுகளிடையே 9 ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையொப்பமாகின.

மேலும், பயங்கரவாதத்துக்கு எதிராக ‘பூஜ்யம்’ சகிப்புத்தன்மைக்கு அழைப்பு விடுத்த இரு நாடுகளும், பயங்கரவாதத்துக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கையை மேற்கொள்ளவும் ஒப்புக்கொண்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com