உயர்சாதியினருக்கு மட்டுமே மத்திய அமைச்சர் பதவியா? கர்நாடக பாஜக எம்.பி. கேள்வி!
உயர்சாதியினருக்கு மட்டுமே மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்படுவதாகவும், தலித்துகள் புறக்கணிக்கப்படுவதாகவும் கர்நாடக பாஜக மக்களவை உறுப்பினர் ரமேஷ் ஜிகஜினகி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரும், விஜயபுரா தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ரமேஷ் ஜிகஜினகி இதுவரை 7 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மதிகா எனும் பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் பாஜகவில் தலித்துகளுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுடன் பேசிய ரமேஷ் ஜிகஜினகி, “இது நியாயமா, அநியாயமா என்று தெரியவில்லை. ஒரு தலித்தாக, ஒட்டுமொத்த தென்னிந்தியாவில் நான் மட்டுமே தொடர்ந்து 7 முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். ஆனால், அனைத்து உயர்சாதியைச் சேர்ந்தத் தலைவர்களும் மத்தியமைச்சர் ஆகிவிட்டனர். தலித்துகள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையா? இது என்னை மிகவும் வருத்தமடையச் செய்கிறது” என்று கூறினார்.
மேலும், “நான் அமைச்சர் பதவியை எனக்காகக் கேட்கவில்லை. ஒவ்வொரு முறை நான் வெற்றிபெற்ற பின் தொகுதிக்கு திரும்புகையில் அனைவராலும் விமர்சிக்கப்படுகிறேன். பாஜக தலித்துகளுக்கு எதிரான கட்சி என்று என்னைப் பலரும் எச்சரித்துள்ளனர். நான் மத்திய அமைச்சராக வேண்டும் என்று மக்கள் அழுத்தம் தருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
7 முறை தனித்தொகுதிகளில் நின்று வெற்றிபெற்றுள்ள ரமேஷ் ஜிகஜினகி கடந்த 2016 - 2019 ஆண்டுகளில் மோடியின் அமைச்சரவையில் மாநிலத்திற்கான குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.