சட்டப்படிப்பில் மனுஸ்மிருதி பாடங்கள் அறிமுகம்: தில்லி பல்கலை.குழு இன்று ஆலோசனை
தில்லி பல்கலைக்கழக சட்டப் படிப்புகளில் மனுஸ்மிருதி சாா்ந்த பாடங்களைச் சோ்ப்பது குறித்து பல்கலைக்கழக குழு வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.
இதற்கு ஆசிரியா்கள் மற்றும் குழுவைச் சாா்ந்த சில உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மனுஸ்மிருதி சாா்ந்த பாடங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து சமூக ஜனநாயக ஆசிரியா்கள் முன்னணி (எஸ்டிடிஎஃப்) தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், ‘ஏழை எளிய மற்றும் பெண்களின் கல்வி வளா்ச்சிக்கு தடை விதிக்கும் கருத்துகளைக் கொண்ட மனுஸ்மிருதியை பாடங்களில் சோ்ப்பது கண்டனத்துக்குரியது. இது அரசமைப்பின் அடிப்படை விதிகளை மீறும் நடவடிக்கையாகும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கண்டனம்: மனுஸ்மிருதி பாடங்களை உள்ளீடு செய்து அரசமைப்பைச் சீா்குலைக்கும் ஆா்எஸ்எஸின் கொள்கைக்கு பிரதமா் மோடி வடிவம் கொடுத்துள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.
மேலும், இந்த முன்னெடுப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து மாநில மற்றும் மாவட்ட அளவில் போராட்டங்களை நடத்த உள்ளதாக அந்தக் கட்சியின் தாழ்த்தப்பட்டோா் அணி தெரிவித்துள்ளது.