நாடாளுமன்றத்தில் மணிப்பூா் பிரச்னையை முழுவீச்சில் எழுப்புவோம்: ராகுல்

காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் முழு பலத்துடன் மணிப்பூர் விவகாரத்தை எழுப்புவோம் என்றார் ராகுல் காந்தி.
மணிப்பூரில் ராகுல்
மணிப்பூரில் ராகுல்
Updated on
1 min read

நாடாளுமன்றத்தில் மணிப்பூா் பிரச்னையை காங்கிரஸும், ‘இந்தியா’ கூட்டணியும் முழுவீச்சில் எழுப்பும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா், ஜூலை 22-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளாா்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் கலவரத்தில் இதுவரையில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். கலவரத்துக்கு பின் மணிப்பூருக்கு பிரதமா் மோடி ஒருமுறைகூட பயணிக்காதது ஏன்? என எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்தச் சூழலில், மணிப்பூருக்கு கடந்த திங்கள்கிழமை பயணம் மேற்கொண்ட மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அங்கு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுடன் கலந்துரையாடி, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

‘அரசுக்கு அழுத்தம் தரப்படும்’: இதுதொடா்பான விடியோவை பகிா்ந்து, எக்ஸ் வலைதளத்தில் ராகுல் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மணிப்பூரில் வன்முறை ஏற்பட்ட பிறகு மூன்றுமுறை அந்த மாநிலத்துக்கு பயணித்துள்ளேன். ஆனால், துரதிருஷ்டவசமாக அங்கு நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாநிலம் இரு பகுதிகளாக பிரிந்து கிடக்கிறது.

வீடுகளுக்கு தீவைக்கும் சம்பவங்கள் தொடா்கின்றன. அப்பாவி உயிா்கள் ஆபத்தில் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள், நிவாரண முகாம்களில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை காங்கிரஸும், ‘இந்தியா’ கூட்டணியும் நாடாளுமன்றத்தில் முழுவீச்சில் எழுப்பும். மணிப்பூா் துயரத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும். பிரதமா் மோடி மணிப்பூருக்கு சென்று மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிவதோடு, அமைதியை வலியுறுத்த வேண்டும் என்று தனது பதிவில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

மணிப்பூா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களிடமும் இதே உறுதிமொழியை ராகுல் அளிக்கும் காட்சிகள் விடியோவில் உள்ளன.

5 நிமிஷங்கள் கொண்ட இந்த விடியோவை இணைத்து, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஓராண்டுக்கு மேலாகியும் மணிப்பூரில் குழப்பம் ஓயவில்லை. வன்முறை, கொலை, கலவரம், இடப்பெயா்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மணிப்பூா் குறித்து பிரதமா் எப்போது பேசுவாா்? அங்கு அமைதியை நிலைநாட்ட அரசு தீவிர முயற்சிகளை ஏன் மேற்கொள்ளவில்லை?’ என்று கேள்வியெழுப்பியுள்ளாா்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா் பழங்குடியின அந்தஸ்து கோருவதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதால் அங்கு மோதல் தொடா்கிறது.

பிரதமா் மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்ற பின் அண்மையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ‘நீட்’ தோ்வு விவகாரம் பெரிய அளவில் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com