
எலான் மஸ்க் நிர்வகிக்கும் எக்ஸ் சமூக வலைதளம் (முன்னர் டிவிட்டர் என அறியப்பட்டது) இந்தியாவில் மே 26 முதல் ஜூன் 25-ம் தேதிக்குள் 1,94,053 கணக்குகளை தடை செய்துள்ளது.
இந்த கணக்குகள் எக்ஸின் கொள்கைகளை மீறியதற்காக, குறிப்பாக குழந்தைகள் பாலியல் அத்துமீறல் மற்றும் அனுமதியில்லாத ஆபாசம் தொடர்பான உள்ளடக்கங்களை பகிர்ந்தமைக்காக தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட 1,991 கணக்குகளும் எக்ஸ் தளத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இந்த காலகட்டத்தில் 1,96,044 கணக்குகளுக்கு தடை விதித்ததாக எக்ஸ் தெரிவித்துள்ளது.
புதிய தகவல்தொழில்நுட்ப விதிகள், 2021-ன்படி எக்ஸ் பயனர்களிடமிருந்து 12,570 புகார்களை ஒரு மாதத்துக்குள் பெற்றுள்ளது. மேலும் கணக்குகள் முடக்கம் தொடர்பான மேல்முறையீடாக 55 புகார்கள் வந்துள்ளன.
அவற்றில் 4 கணக்குகளை மீண்டும் இயங்க அனுமதித்துள்ள எக்ஸ் மீதியுள்ள கணக்குகளின் முடக்கம் தொடருமென தெரிவித்துள்ளது.
பெரும்பாலான புகார்கள், தடை மீறல் (5,289), பாலியல் உள்ளடக்கம் (2,768), வெறுப்பு நடவடிக்கை (2,196) மற்றும் வன்கொடுமை/தீண்டல் (1,243) ஆகிய பிரிவுகளில் இந்தியாவிலிருந்து பெறப்பட்டதாக எக்ஸ் தெரிக்கிறது.
முந்தைய மாதத்தில் தடை செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 2,29,925 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.