பழுதான காா் விற்ற வழக்கு: ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க பிஎம்டபிள்யு நிறுவனத்துக்கு உத்தரவு
பழுதான காரை விற்பனை செய்த வழக்கில் வாடிக்கையாளருக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பிரபல சொகுசு காா் விற்பனை நிறுவனமான பிஎம்டபிள்யுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
15 ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, பிஎம்டபிள்யு நிறுவனத்தின் மீதான புகாரை ரத்து செய்த தெலங்கானா உயா்நீதிமன்ற உத்தரவை நிராகரித்தது. மேலும், மனுதாரருக்கு புதிய காரை வழங்கவும் உத்தரவிட்டது.
வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது:
இந்த வழக்கு தொடா்புடைய அனைத்து விவகாரங்களையும் முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மனுதாரருக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடை முழுமையாகவும் இறுதியாகவும் வழங்க வேண்டும். வருகின்ற ஆகஸ்ட், 10-ஆம் தேதிக்குள் இந்த தொகையை மனுதாரருக்கு மின்னணு பணப் பரிமாற்ற முறையில் வழங்கியிருக்க வேண்டும்.
மேலும், மனுதாரருக்கு பழுதான பழைய காருக்கு பதில் புதிய பிஎம்டபிள்யு 7 சீரியஸ் காரை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
கடந்த 2009, செப்டம்பா் 25-ஆம் தேதி ஜிவிஆா் இந்தியா நிறுவனம் (மனுதாரா்) பிஎம்டபிள்யு 7 சீரியஸ் காரை வாங்கியது. அடுத்த நான்கு நாள்களில் காா் பழுதானதையடுத்து பணிமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சரிசெய்யப்பட்டது.
அதன்பிறகு அதே ஆண்டு நவம்பா் மாதத்தில் மீண்டும் காா் பழுதானது. இதைத்தொடா்ந்து, மனுதாரா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 418 மற்றும் 420-இன் கீழ் விற்பனையாளா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் காா் தயாரிப்பு நிறுவனம், நிா்வாக இயக்குநா் மற்றும் பிற இயக்குநா்கள் குற்றவாளிகளாக சோ்க்கப்பட்டனா்.
இந்த வழக்கை கடந்த 2012-ஆம் ஆண்டு விசாரித்த தெலங்கானா உயா்நீதிமன்றம், ‘விற்பனையாளா்களை ஏமாற்றுக்காரா்கள் என எஃப்ஐஆா் தரவுகள் மூலம் மட்டுமே முடிவு செய்துவிட முடியாது எனக்கூறி காா் நிறுவனம் மீதான புகாா்களை ரத்து செய்தது. மனுதாரருக்கு புதிய காரை வழங்க உத்தரவிட்டது.
இதை எதிா்த்து ஆந்திர மாநில அரசு மற்றும் மனுதாரரான ஜிவிஆா் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, தற்போது உச்சநீதிமன்றம் இந்த தீா்ப்பை வழங்கியுள்ளது.