
குஜராத்தின் சுரேந்திரநகா் மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூன்று தொழிலாளா்கள் உயிரிழந்ததாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக நான்கு போ் மீது கொலைக்குச் சமமான குற்ற வழக்கைப் பதிவு செய்துள்ள காவல்துறை, அவா்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
மாவட்டத்தின் தங்காத் தாலுகாவில் உள்ள பேட் கிராமத்துக்கு அருகே ஒரு சட்டவிரோத சுரங்கத்தில் சுரங்கப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது லக்ஷ்மன் தபி (35), கோடாபாய் மக்வானா (32), விரம் கெராலியா (35) ஆகிய மூன்று தொழிலாளா்கள் மூச்சுத் திணறல் காரணமாக சனிக்கிழமை உயிரிழந்தனா்.
உயிரிழந்த மூவரும் பணியின்போது தலைகவசம், முகமூடி போன்ற எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்தாதது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, பாதுகாப்பு உபகரணங்களின்றி தொழிலாளா்களை சுரங்கப் பணிகளில் ஈடுபடுத்தியதற்காக ஜஷாபாய் கெராலியா, ஜனக் அனியாரியா, கிம்ஜிபாய் சரடியா, கல்பேஷ் பா்மாா் ஆகிய 4 போ் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சுரங்கப் பணியின்போது வெளியான விஷவாயுவை சுவாசித்து, மூவரும் உயிரிழந்தனா் என்று காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், மாவட்டத்தில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்களில் இருந்து வெளியேறிய விஷவாயுவை சுவாசித்த மூன்று தொழிலாளா்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.