பில்லி சூனியம் தொடர்பான வழக்குகள்: அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

மகாராஷ்டிரத்தில் பில்லி சூனியம் தொடர்பான வழக்குகள் குறித்த முழு விவரங்களை அறிக்கை சமர்பிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மாநிலத்தில் நடக்கும் பில்லி, சூனியம் தொடர்பான வழக்குகள் குறித்த முழு விவரங்களை அறிக்கையாக 4 வாரங்களுக்குள் சமர்பிக்குமாறு மகாராஷ்டிரா அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அறிக்கை சமர்ப்பிக்கத் தவறினால் கட்டாயப்படுத்தி சமர்ப்பிக்கவைக்கும் வழிமுறைகளைக் கையாளவிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ராதாகந்தா திரிபாதி தாக்கல் செய்த மனுவை அடிப்படையாகக் கொண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிரத்தின் கொங்கன் பகுதியில் பெண்களைக் கருத்தரிக்க வைப்பதற்காக நடைமுறையில் இருக்கும் சூனியச் சடங்குகள் பற்றி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள திரிபாதி ஒரு சம்பவத்தில் கருத்தரிப்பதற்காக ஒரு பெண்ணுக்கு இறந்த மனிதர்களின் எலும்புகளைப் பொடி செய்து அதனை சாப்பிடுமாறு மாமியாரும் கணவரும் வற்புறுத்தியதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோப்புப் படம்
முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் - உச்சநீதிமன்ற தீா்ப்பு இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது: முஸ்லிம் வாரியம்

மற்றொரு நிகழ்வில், நன்கு படித்த பெண் ஒருவரைக் கருவுறச் செய்ய மனித எலும்பினைப் பொடி செய்து வீட்டார் சாப்பிடச் சொன்னதாக சிங்காத் பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

ஆனால், மகாராஷ்டிர காவல்துறை அதிகாரிகள் பில்லி சூனியம் தொடர்பான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தனர்.

மற்றொரு நிகழ்வில், ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கும் சடங்காகப் பொதுவெளியில் நிர்வாணமாகக் குளிக்குமாறு கட்டாயப்படுத்திய கணவர் மற்றும் மாமியார் மீது பெண் ஒருவர் புகாரளித்துள்ளார். உள்ளூர் சூனியக்காரர் ஒருவர் பரிந்துரையின் பேரில் இதனை செய்யச் சொல்வதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரத்தின் மனிதபலி மற்றும் மனிதாபிமானமற்ற சடங்குகளை ஒழித்தல், தீயசக்தி, அகோரி மற்றும் பில்லி சூனிய சடங்குகள் தடுப்புச் சட்டத்தினை செயல்படுத்துவதில் மாநில அரசு தவறியதால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாக திரிபாதி கூறியுள்ளார்.

மாநில இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு, மாநிலத்தில் நடைபெறும் இத்தகைய மனிதாபிமானமற்ற நடைமுறைகளை ஒழிப்பதற்கு எடுக்கப்படும் தடுப்பு மற்றும் தண்டனை நடவடிக்கைகளை உறுதி செய்து, தவறு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் மனுதாரர் வலியுறுத்தினார்.

பல செய்தி நிறுவனங்களின் செய்திக் குறிப்புகளை குறிப்பிட்டுள்ள திரிபாதி, பில்லி சூனியம் குறித்த தகவல்களைப் பரப்பும் செய்தி நிறுவனங்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், தவறானத் தகவல்களைப் பரப்பும் நிறுவனங்கள் மீது பத்திரிகை கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com