மகாராஷ்டிரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்தின் தானே மாவட்டத்தில் வசித்து வரும் 11 வயதுடைய ஒரு சிறுமியை, அதே பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் வேறொரு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு சென்ற அவர்கள் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை வெளியில் சொன்னால், கொன்று விடுவதாக சிறுமிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இருப்பினும், அவர்களிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு வந்த சிறுமி, தனது குடும்பத்தினரிடம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து விவரித்துள்ளார். இதனைத் தொடந்து சிறுமியின் பெற்றோர், தங்களது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்றும், மற்றும் இந்த சம்பவத்தில் ஒரு பெண்ணும் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஒரு பெண் உள்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் 18 வயதுக்கு கீழ் இருந்த இரண்டு சிறுவர்கள் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர்.