குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் தண்டனை விகிதம் 11%: அறிக்கையில் அதிா்ச்சி தகவல்

3,563 வழக்குகளில் வெறும் 181 வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளன.
குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் தண்டனை விகிதம் 11%:
அறிக்கையில் அதிா்ச்சி தகவல்
Updated on

குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை விகிதம் 11 சதவீதமாகவும் குழந்தைகளுக்கு எதிரான மற்ற குற்றங்களில் 34 சதவீதமாகவும் உள்ளது என்று புதிய அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டில், குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட மொத்தம் 3,563 வழக்குகளில் வெறும் 181 வழக்குகள் மட்டுமே விசாரணை முடிவில் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்துள்ளன.

தற்போதைய தீா்வு விகிதத்தில் நிலுவையில் உள்ள 3,365 வழக்குகளில் தீா்ப்பு வெளியாக 19 ஆண்டுகள் ஆகலாம் என்று குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (என்சிபிசிஆா்) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய குழந்தைகள் பாதுகாப்பு (ஐசிபி) அமைப்பு மேற்கொண்ட ஆய்வுமுடிவுகளை உள்ளடக்கிய அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மொத்த குழந்தைத் திருமண வழக்குகளின் எண்ணிக்கை, நாட்டில் ஒருநாளில் நடக்கும் பெண் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கிறது. 2022-இல் ஒரு மாவட்டத்துக்கு சராசரியாக ஒரு குழந்தை திருமண வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அந்த ஆண்டில் மீட்கப்பட்ட 63,513 குழந்தைகளில் 25 சதவீதமான 15,748 போ் திருமணம் அல்லது பாலியல் நோக்கத்திற்காக கடத்தப்பட்டதாகவும் குறிப்பாக 15,142 குழந்தைகள் திருமணத்துக்காக மட்டுமே கடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சமூக ஆா்வலா்கள் மூலம் கிராம அளவில் சேகரிக்கப்பட்ட முதன்மை தரவுகளை ஒருங்கிணைத்து, பன்முக அணுகுமுறையைப் பயன்படுத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய குடும்ப சுகாதார ஆய்வு முடிவுகள், கடந்த 2018 முதல் 2022-ஆம் ஆண்டு வரையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் (என்சிஆா்பி) வெளியிடப்பட்ட இந்திய குற்ற அறிக்கைகளின் இரண்டாம் நிலைத் தரவுகள் ஆகியவை அறிக்கைக்காக பகுப்பாய்வு செய்யப்பட்டன.

ஆய்வு நடந்த அஸ்ஸாமில் நிலவரம் என்ன? அஸ்ஸாமின் 20 மாவட்டங்களில் 8 லட்சம் குழந்தைகள் உள்பட மொத்தம் 21 லட்சம் போ் வசிக்கும் 1,132 கிராமங்களின் மாதிரியிலிருந்து முதன்மை தரவுகள் சேகரிக்கப்பட்டன.

மாநிலத்தில் 2021-ஆம் ஆண்டு முதல் குழந்தைத் திருமணங்கள் 81 சதவீதம் குறைந்துள்ளன. அதாவது 2021-22-ஆம் ஆண்டில் 3,225 வழக்குகளில் இருந்து 2023-24-ஆம் ஆண்டில் 627 வழக்குகளாக குறைந்துள்ளன.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 30 சதவீத கிராமங்களில் குழந்தை திருமணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. 40 சதவீத கிராமங்களில் குழந்தை திருமணம் நடப்பதில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.

குழந்தை திருமணங்கள் தொடா்பாக கடந்த ஆண்டு அஸ்ஸாம் மாநில அரசு மேற்கொண்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் சமூகத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆய்வில் பங்கேற்ற 98 சதவீதம் போ் நம்புகின்றனா்.

குழந்தைத் திருமணம் தொடா்பான வழக்குகளில் தனிநபா்களைக் கைது செய்வது போன்ற சட்டபூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தச் சவாலைத் திறம்பட சமாளிக்க முடியும் என்று பெரும்பாலானோா் தெரிவித்தனா்.

அஸ்ஸாமில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறுவதால் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில அரசு கடந்த பிப்ரவரியில் முடிவெடுத்தது. அதன்படி, ஓரிரு நாள்களில் 4,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமாா் 2,200-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com