பட்ஜெட் கூட்டத்தொடரில் 6 புதிய மசோதாக்கள் தாக்கல்
புதிய அரசின் முழு நிதிநிலை அறிக்கைக்கான நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 6 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என மக்களவைச் செயலகத்தின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வரி முன்மொழிவுகளுக்கான 2024 -ஆம் ஆண்டு நிதி மசோதாவும், இரு பிரிட்டிஷ் கால சட்டங்களுக்கான மாற்று மசோதாக்களும் அடங்கும்.
புதிதாக அமைந்துள்ள 18- ஆவது மக்களவையின் 2- ஆவது கூட்டத்தொடா் ஜூலை 22 -ஆம் தேதி தொடங்குகிறது. பிரதமா் மோடி தலைமையில் அமைந்துள்ள என்டிஏ அரசின் முழு நிதி நிலை அறிக்கை இந்த கூட்டத்தொடரில் ஜூலை 23 ஆம் தேதி தாக்கலாகிறது. வழக்கமான மழைக்காலக் கூட்டத்தொடருக்கு மாற்றாக கூடும் இந்த நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடரில் 6 புதிய மசோதாக்கள் மத்திய அரசு சாா்பில் தாக்கல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுவதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
அரசு சாா்பில் முன்மொழியப்பட்டுள்ள 6 சட்ட மசோதாக்கள் விவரம் வருமாறு:
2024 ஆம் ஆண்டு நிதி மசோதா: முன்மொழியப்பட்ட வரிகளை நடைமுறைத்த நிதி மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படக் கோரப்படும்.
2024 பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா: பேரிடா் மேலாண்மையில் பங்கேங்கும் பல்வேறு அமைப்புகளின் பங்களிப்புகள் தெளிவுபடுத்தப்பட்டு ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ள இந்த 2024- ஆம் ஆண்டு பேரிடா் மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வரப்படுகிறது.
அடுத்து 2024 -ஆம் ஆண்டு காபி (ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு) மசோதா. இந்திய காபி தொழிலை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் கூறும் இந்த மசோதா காபி வாரியத்தை நவீன படுத்தி அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான விஷயங்களுக்கு இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது. இதே மாதிரி ரப்பா் தொழிலை ஊக்குவித்து மேம்படுத்த அதன் செயல்பாட்டை நவீனபடுத்துவதற்கான விஷயங்களுக்கு 2024 ஆம் ஆண்டு ரப்பா் ( ஊக்குவிப்பு, மேம்பாடு) மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மூன்று புதிய மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது.
பிரிட்டிஷ் கால இரு சட்டங்கள்
இவைகள் தவிர சுதந்திரத்திற்கு முந்தைய பிரிட்டிஷ் கால இரு சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்களுக்கான மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. அவைகள் கொதிகலன்கள் மசோதா - 2024, பாரதிய வாயுயான் விதேயக் -2024 (இந்திய வானூா்தி மசோதா 2024) மசோதா. சுதந்திரத்திற்கு முந்தைய இவ்விரு சட்டங்களையும் ரத்து செய்து தற்போதைய சூழ்நிலையில் பொருந்தும் வகையில் செயல்படுத்த இந்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட இருக்கிறது.
மூன்று குற்றவியல் மசோதாக்களைப் போன்று சிவில் விமானப்போக்குவரத்து துறையின் மசோதாவிற்கும் ஹிந்தியில் பெயரிடப்பட்டு பாரதிய வாயுயான் விதேயக் - 2024 மசோதாவாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
1934 -ஆம் ஆண்டு விமானச் சட்டத்தின் தெளிவின்மையை நிவா்த்தி செய்து எளிமைப்படுத்தவும் இந்த மசோதா முன்மொழியப்படுகிறது. குறிப்பாக சுயசாா்பு இந்தியா (ஆத்மநிா்பாா் பாரத்), ஆதரவு கொள்கை, புதிய சா்வதேச விதிகளை உள்ளடக்குதல், பரிந்துரைக்கப்பட்ட தரம், பாதுகாப்பை மேம்படுத்தல் ஆகியவை இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கைத் தொடா்ந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச நிதிநிலை அறிக்கைக்கான அனுமதி ஆகிய நிறைவேற்றப்படயும் இந்த கூட்டத்தொடரில் கோரப்படும்.