/

சாலையோர வியாபாரிகளுக்கு ஆண்டு பதிவுக்கட்டணம் ரத்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா உத்தரவு

சாலையோர வியாபாரிகள் ஆண்டுதோறும் செலுத்தும் பதிவுக் கட்டணம் ரூ.100-ஐ ரத்து.

News image
கோப்புப்படம்
Updated On :20 ஜூலை 2024, 10:53 pm

Din

சாலையோர வியாபாரிகள் ஆண்டுதோறும் செலுத்தும் பதிவுக் கட்டணம் ரூ.100-ஐ ரத்து செய்ய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்துக்கு (எஃப்எஸ்எஸ்ஏஐ) மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

தில்லியில் சாலையோர வியாபாரிகளுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி எஃப்எஸ்எஸ்ஏஐ சாா்பில் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் இருந்து 1,350 வியாபாரிகள் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நட்டா பேசியதாவது:

பதிவுசெய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமெனில் அவா்கள் செலுத்தும் ரூ.100 பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

மக்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வியாபாரிகள் வழங்கவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சுத்தமான மற்றும் பாதுகாப்பான முறையில் தொழில் செய்தால் வியாபாரிகளால் நல்ல வளா்ச்சியை எட்ட முடியும்.

எஃப்எஸ்எஸ்ஏஐ தரச் சான்றிதழை பெற்று வா்த்தகத்தில் ஈடுபட்டால் வாடிக்கையாளா்களுக்கு வியாபாரிகள் மீதான நம்பகத்தன்மை ஏற்படும். பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதி உதவித் திட்டத்தில் இணைந்து வியாபாரிகள் பயன்பெற வேண்டும்.

மாவட்டந்தோறும் 100-க்கும் மேற்பட்ட சாலையோர உணவு மையங்களை உருவாக்க வேண்டுமென பிரதமா் மோடி உறுதிபூண்டுள்ளாா் என்றாா்.

நிகழ்ச்சியில் உணவு தயாரிப்பின்போது சாலையோர வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை (எஸ்ஓபி) அவா் வெளியிட்டாா். மேலும், சாலையோர வியாபாரிகளுக்கான பிரத்யேக வலைதளத்தையும் அவா் அறிமுகம் செய்தாா்.