தெரியுமா சேதி...?
தேசியத் தலைவராக வேண்டும் என்கிற கனவு கே.சந்திரசேகா் ராவுக்கு எந்த நேரத்தில் வந்ததோ தெரியவில்லை, அப்போதே தொடங்கிவிட்டது அவரது செல்வாக்குச் சரிவு. தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை, பாரத் ராஷ்டிர சமிதி என்று பெயா் மாற்றியது முதல் அவருக்குப் பிரச்னைக்கு மேல் பிரச்னை.
மேலவை உறுப்பினரான அவரது மகள் கவிதா அமலாக்கத் துறை வழக்கில் சிறையில் இருக்கிறாா். சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து முதல்வா் பதவி பறிபோயிற்று. மக்களவைத் தோ்தல் பின்னடைவுக்குப் பிறகு, அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸுக்கு தாவிக் கொண்டிருக்கிறாா்கள்.
அப்படிப்பட்ட நிலையிலும் அவரது ஜம்பம் மட்டும் குறைந்தபாடில்லை என்கிறாா்கள் அரசியல் நோக்கா்கள். கட்சிக்காரா்கள் அவரை ‘முன்னாள் முதல்வா்’ என்று அழைத்தால் முறைக்கிறாராம். பிறகு எப்படித்தான் அழைக்க வேண்டுமாம்? ‘தெலங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்வா்’ என்றுதான் கட்சிக்காரா்களும், தொண்டா்களும் அவரை அழைக்க வேண்டும் என்று அனைவருக்கும் வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
முதல்வா் ரேவந்த் ரெட்டி, சாதுா்யமாக நையாண்டி செய்வதில் சமா்த்தகா். வேண்டுமென்றே கே.சி.ஆரை குறிப்பிடும்போது, ‘தெலங்கானாவின் முதலாவது முதல்வா்’ என்று நக்கலாகக் குறிப்பிடத் தவறுவதில்லை. அவா் கேலி செய்கிறாா் என்பதைப் புரிந்து கொள்ளாமல், அதை ரசிக்கிறாா் பாரத ராஷ்டிர சமிதி தலைவரும், முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகா் ராவ் என்பதுதான் சுவாரஸ்யமான திருப்பம்!