
மத்திய பட்ஜெட்டில், மேற்கு வங்க மாநிலம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதற்கு, மத்திய நிதியமைச்சர் அளித்த பதிலால், காரசார விவாதம் எழுந்தது.
மத்திய அரசு, மேற்கு வங்க மாநிலத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என்ற திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 10 ஆண்டுகளாக, மேற்கு வங்கம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, தற்போது துணிச்சலாக, மாநிலங்களவையில் என்னை கேள்வி கேட்கிறார்கள் என்று கூறினார்.
மேற்கு வங்கம், தெலங்கானா, பஞ்சாப் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை என்று மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். மேலும், மத்திய பட்ஜெட், ஆந்திர - பிகார் பட்ஜெட் போன்று அமைந்திருந்ததாகவும், பாஜக அரசானது, தங்களது கூட்டணிக் கட்சிகளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவே அனைத்து முயற்சிகளையும் எடுத்திருக்கிறது என்றும் குற்றம்சாட்டியிருக்கிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில், சமூக வலைத்தளங்களிலும், ஆந்திர - பிகார் பட்ஜெட் என கடுமையாக விமர்சித்து பதிவுகள் போடப்பட்டிருந்தன.
இது குறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் பேசுகையில், மேற்கு வங்கத்துக்கு வர வேண்டிய நிலுவைத்தொகைகளை உடனடியாக மத்திய அரசு ஒதுக்க வேண்டும். மிகவும் மோசமான விஷயங்கள் குறித்து நிதியமைச்சர் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
அபிஷேக் பேனர்ஜி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், பட்ஜெட் முழுக்க முழுக்க ஹீரோ வாரண்டி, தோல்வியடைந்த அரசின் தோல்வியடைந்த நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட். நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து கவனிக்காமல், இந்த பட்ஜெட், தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு லஞ்சம் கொடுப்பதைப் போல உருவாக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.