
மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.
இதில், ஆந்திரம், பிகார் ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களை அறிவித்து, மற்ற மாநிலங்கள் மீது பாரபட்சம் காட்டியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர்.
இந்த நிலையில், மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை பட்ஜெட்டை விவாதத்துக்கு முன்வைத்தபோது, சில மாநிலங்களுக்கு அதிக நிதியும், பல மாநிலங்களுக்கு நிதியே ஒதுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளதாக கார்கே பேசியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
கார்கேவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை என்றும் அனைத்து மாநில பெயர்களையும் குறிப்பிட முடியாது என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
அதேபோல், மக்களவை கேள்வி நேரத்தின் போது பட்ஜெட்டுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.