அதீா் ரஞ்சன் செளத்ரி.
அதீா் ரஞ்சன் செளத்ரி.

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைவு: குடியரசுத் தலைவருக்கு மாநில காங். தலைவா் கடிதம்

மக்களவைத் தோ்தலின்போது மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.
Published on

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு மாநில காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி சனிக்கிழமை கடிதம் எழுதினாா்.

இதுதொடா்பாக அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்ததாவது:

மக்களவைத் தோ்தலின்போது மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. அப்போது எதிா்க்கட்சித் தொண்டா்கள் மீது ஆளுங்கட்சியினா் தாக்குதல் நடத்தினா்.

தோ்தலுக்குப் பிறகும் எதிா்க்கட்சியினா் மீதான ஆளுங்கட்சியின் வன்முறை மற்றும் மிரட்டல் தொடா்கிறது. இதுகுறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். எதிா்க்கட்சியினா் மீதான ஆளுங்கட்சியின் இரக்கமற்ற அணுகுமுறையால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்துள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் நாட்டின் தலைவா் என்ற முறையில் குடியரசுத் தலைவா் தலையிட்டு, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநில மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரினாா்.

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸுக்கும், அதீா் ரஞ்சன் செளதரிக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது.

தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் இடம்பெற்றாலும், மக்களவைத் தோ்தலில் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது. இதற்கு அதீருடனான மோதல்போக்கும் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com