தமிழகத்திற்கு கூடுதலாக 47 டிஎம்சி காவிரி நீர் விடுவிப்பு!
காவிரியில் நிகழாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் பெற வேண்டிய அளவை விட கூடுதலாக 47 டிஎம்சி தண்ணீரை தமிழகம் பெற்றுள்ளது என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


நமது சிறப்பு நிருபர்
புது தில்லி: காவிரியில் நிகழாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் பெற வேண்டிய அளவை விட கூடுதலாக 47 டிஎம்சி தண்ணீரை தமிழகம் பெற்றுள்ளது என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 100 -ஆவது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை காணொலி வழியாக நடைபெற்றது. காவிரி நதி நீர் சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் பங்கேற்ற இக்கூட்டம் முதன் முறையாக மிகவும் சுமுகமாக நடைபெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது. காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவின் தமிழக உறுப்பினரும் தமிழக நீர்வளத் துறையின் திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளருமான தயாளகுமார் மேட்டூரிலிருந்தும், காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் சென்னையிலிருந்தும் காணொலி வழியாக கலந்து கொண்டனர்.
தமிழக உறுப்பினர் தயாளகுமார் கூட்டத்தில் விரிவாகப் பேசினார். மேட்டூர், பவானி, அமராவதி அணைகளின் நீர் வரத்து, மற்றும் மேட்டூர் நீர் இருப்பு (88 டிஎம்சி) ஆகிய விவரங்களையும் ஜூன் 1 முதல் ஜூலை 28- ஆம் தேதி வரை உச்சநீதிமன்ற ஆணைப்படி தரப்பட வேண்டிய 37.40 டிஎம்சிக்குப் பதிலாக 76.77 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து பெறப்பட்டது போன்ற விவரங்களை அவர் தெரிவித்தார்.
மேலும், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு 23,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினீத் குப்தா கூறுகையில், "உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி ஜூன், ஜூலை மாதங்களில் 40.43 டிஎம்சி தண்ணீரும், ஆகஸ்ட் மாதம் 45.95 டிஎம்சி தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது ஜூன் 29 ஆம் தேதி கூடுதலாக 6 டிஎம்சி தண்ணீரை தமிழகம் பெற்றது. இதன்படி இதுவரை 82.7 டிஎம்சி தண்ணீர் பிலுகுண்டுலுவில் விடுவிக்கப்பட்டு விட்டது.
மேலும், தற்போது ஜூலை 30-ஆம் தேதி முதல் 2 டிஎம்சி தண்ணீர் வீதம் பிலுகுண்டுலுவில் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் ஜூலை மாதம் இறுதியில் தமிழகம் மொத்தம் 86.7 டிஎம்சி தண்ணீரை பெறும். காவிரியில் ஜூலை மாதத்தில் இதுவரை கூடுதலாக 47 டிஎம்சி தண்ணீரை தமிழகம் பெற்றுள்ளது. இதனால், ஆகஸ்ட் மாதம் பெறவேண்டிய 45 டிஎம்சி தண்ணீரை தமிழகம் முன் கூட்டியே பெற்றுள்ளது.
நிகழாண்டில் தென் மேற்குப் பருவ மழையால் ஜூன் 1 முதல் ஜூலை 27-ஆம் தேதி வரை காவிரிப் படுகையின் மேற்புறத்தில் இயல்பை விட அதிக அளவு மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஒரு வாரத்திற்கு பிலுகுண்டுலுவின் மேல்புறத்தில் உள்ள காவிரிப் படுகையில் மழை பெய்யும். ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்திற்குப் பின்னரும் பருவமழை மீண்டும் தொடர வாய்ப்பு இருப்பது குறித்தும் ஐஎம்டி தெரிவித்துள்ளது. இதனால், தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை ஏதும் இல்லாததால் தமிழகம், கர்நாடகம் தரப்பில் சுமுகமான நிலை நிலவுகிறது' என்றார்.
இந்நிலையில், "கர்நாடகத்தின் 4 முக்கிய அணைகளிலும் முழு கொள்ளளவையும் எட்டி உள்ளதால், உச்சநீதிமன்ற ஆணைப்படி தொடர்ச்சியாக பிலிகுண்டுலுவில் தண்ணீர் வழங்க வேண்டும்' என கூட்டத்தின் இறுதியில் தமிழக உறுப்பினர் தயாளகுமார் கேட்டுக் கொண்டார்.
"மேக்கேதாட்டு அணை: ஆய்வுக்கு ஆணையம் பரிந்துரை'
கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணையின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அம்சங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நீர்வள ஆணையத்திற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேக்கேதாட்டு அணை குறித்து அதிமுக உறுப்பினர் தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சர் ராஜ் பூஷண் செüதரி பதலளித்துப் பேசியது வருமாறு:
பெங்களூரு பெருநகரப் பகுதிக்கும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் குடிநீர் சேவையை வழங்க 4.75 டிஎம்சி தண்ணீரை சேமிக்கவும், ஆண்டுக்கு 177.25 டிஎம்சியை தமிழகத்திற்கு முறைப்படுத்தி வழங்கவும், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை செயல்படுத்த கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு சுமார் ரூ. 9,000 கோடி செலவாகும் என 2018-19 ஆண்டில் மதிப்பிடப்பட்டது.
இந் நிலையில், இத்திட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கடந்த
28 -ஆவது கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்துகளின் அடிப்படையில், இத்திட்டத்தின் பல்வேறு தொழில்நுட்ப, பொருளாதார அம்சங்களின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக மீண்டும் மத்திய நீர் வள ஆணையத்திற்கு திட்டத்தை காவிரி மேலாண்மை ஆணையம் திரும்ப வழங்கியுள்ளது'என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...