இது மோடியின் தார்மிக தோல்வி: கார்கே
இது நரேந்திர மோடியின் தார்மிக தோல்வி என மக்களவைத் தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (ஜுன் 4) தெரிவித்தார்.
தில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ''தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும். இது மக்களின் தீர்ப்பு. மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி. இது மக்களுக்கும் மோடிக்கும் இடையிலான போர்.
இம்முறை எந்தவொரு கட்சிக்கும் மக்கள் பெரும்பான்மையை கொடுக்கவில்லை. குறிப்பாக ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை கொடுக்கவில்லை. இது அவர்களின் அரசியல் மற்றும் தார்மிக தோல்வி.
காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் மிகவும் மோசமான சூழலில் தேர்தலில் போட்டியிட்டதை மக்கள் அறிவார்கள். எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்குகளை முடக்குவது என பல்வேறு விதமான இடையூறுகளை அரசு இயந்திரம் ஏற்படுத்தியது.
தேர்தலில் ஆரம்பம் முதல் இறுதிவரை காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் நேர்மறையாகவே இருந்தது. பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகிய பிரச்னைகளை முன்வைத்தோம். பிரதமர் மோடி செய்த பிரசாரம் வரலாற்றின் நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்'' எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.