
அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகரமான அமராவதியில் நிலத்தின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலம், கடந்த 2014இல் தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் என இருவேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. இந்த நிலையில், ஆந்திர தலைநகரமாக இருந்த ஹைதராபாத் தெலங்கானா மாநிலத்தின் எல்லைக்கு மாறியது. இதைத் தொடர்ந்து, ஆந்திரத்தின் புதிய தலைநகரமாக குண்டூர் மாவட்டத்திலுள்ள அமராவதி இருந்து வருகிறது.
சந்திரபாபு நாயுடு தலைமையிலான கடந்த ஆட்சிக்காலத்தில் அமராவதியில் சிங்கப்பூர் தரத்தில் 200 சதுர கி.மீக்கும் அதிக பரப்பளவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட திட்டம் வகுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக தலைநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், 2019இல் சந்திரபாபு நாயுடுவுக்கு பின் முதல்வராக பதவி வகித்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அம்மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக அமராவதி, விஜயவாடா, கா்னூல் என மொத்தம் 3 தலைநகரங்கள் செயல்படுமென அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அமராவதி திட்டம் கிடப்பில் போடப்பட்டது.அமராவதி மீதான கவனமும் ஈர்ப்பும் குறைந்தது. அங்கு நிலத்தின் சந்தை மதிப்பு 60 - 75 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்தது. 2019இல் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பின், அமராவதியில் பெரிய அளவிலான திட்டங்களோ வளர்ச்சிப் பணிகளோ நடைபெறவில்லை.
தற்போது முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு அமராவதி மட்டுமே ஆந்திரத்தின் தலைநகரமாக இருக்கும் என்ற வாக்குறுதியை தனது தேர்தல் பிரசாரங்களில் பேசியிருந்தார்.
ஆந்திரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டநிலையில், அதில் அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. ஆந்திர முதல்வராக ஜூன் 12 ஆம் தேதி காலை சந்திரபாபு நாயுடு பதவியேற்கிறார். பதவியேற்பு விழா கேசரிபள்ளியில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் அமராவதியை மையப்படுத்தியே வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் அறிவுறுத்தலின் பேரில் அமராவதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் இப்போது மீண்டும் வேகமெடுத்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆந்திர தலைமைச்செயலர் நீரப் குமார் பிரசாத் சமீபத்தில் அமராவதிக்கு நேரில் சென்று திட்டப் பணிகளை ஆய்வும் செய்துள்ளார்.
2019க்கு முன்பு வரை, அமராவதியில் நிலத்தின் சந்தை மதிப்பு நிலவரம்: ஒரு சதுர யார்டுக்கு ரூ. 25,000 - 60,000 வரை இருந்தது. அதைத்தொடர்ந்து, ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ஒரு சதுர யார்டுக்கு ரூ. 9000 - 18,000 ஆக கணிசமான வீழ்ச்சியை சந்தித்தது.
இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு பின், ஒரு சதுர யார்டுக்கு ரூ.30,000 - 60,000 ஆக நிலத்தின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, அமராவதியில் கல்வி நிறுவனங்கள், மத்திய மாநில அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தின் சந்தை மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை அமராவதியில் இருந்த நிலைமை இப்போது இல்லை. நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளதாக அந்நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அமராவதியின் சுற்றுவட்டாரப் பகுதிகளான ராயபுடி, இனவொலு, குரகல்லு, நெலப்பாடு, வெலகாபுடி, கிருஷ்ணைய்யாபாலம், வேங்கடைய்யாபாலம், டையமண்ட் ரிங் பகுதி, அமராவதி இணைப்புச் சாலைகளையொட்டிய பகுதிகளில் நிலத்திற்கான மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள விவசாயிகள், நிலத்தரகர்கள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலிருந்தும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்தும் பல முதலீட்டாளர்கள் அமராவதியில் நிலம் வாங்கி முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அமராவதியில் ரியல் எஸ்டேட் முகவர்களும் முகாமிட்டுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் ஹைதராபாத்துக்கு போட்டியாக உலகத் தரத்திலான மாநகரமாக அமராவதி உருவெடுக்கப் போவதாக அதிகாரிகள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.