இந்திய வரலாற்றில் முதல்முறையாக முஸ்லிம் இல்லாத மத்திய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 71 அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். இந்த முறை மத்திய அமைச்சரவையில் மாநிலங்கள், சாதிகள் வாரியாக பல்வேறு தரப்பினருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது.
ஆனால், நாட்டில் வசிக்கும் 20 கோடி முஸ்லிம் மக்களுக்கான ஒரு பிரதிநிதிகூட அமைச்சரவையில் இல்லை என்பது சர்ச்சையாகியுள்ளது.
மோடி தலைமையிலான கடந்த மத்திய அமைச்சரவையிலும் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. 2019-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக அமைக்கப்பட்ட மோடி தலைமையிலான அமைச்சரவையில், சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சராக பாஜகவின் முக்தார் அப்பாஸ் நக்வி பதவியேற்றிருந்தார். ஆனால், 2022-ஆம் ஆண்டுடன் அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிறைவடைந்தததை அடுத்து, அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
2014 ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற போது பாஜகவின் நஜ்மா ஹெப்துல்லா சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராக பதவியேற்றிருந்தார். அப்போதும் ஒருவருக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முறையே 4 மற்றும் 5 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
வாஜ்பாயி தலைமையிலான அமைச்சரவையில் 1999 ஆம் ஆண்டு இருவர் மத்திய அமைச்சராகவும், 1998 இல் ஒருவர் மத்திய இணையமைச்சராகவும் இருந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக அமைக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சரவைகளிலும் குறைந்தபட்சம் ஒரு பிரதிநிதித்துவம் ஆவது முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மக்களவைத் தேர்தல் 2024 இல் போட்டியிட்டு 24 முஸ்லிம் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 21 பேர் ‘இந்தியா’ கூட்டணியை சேர்ந்தவர்கள். மற்றவர்களில் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி, ஜம்மு - காஷ்மீர் சுயேச்சை எம்பி அப்துல் ரஷித் ஷேக் மற்றும் லடாக்கின் முகமது ஹனிஃபா ஆகியோர் ஆவர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேர்தெடுக்கப்பட்ட 293 பேரில் ஒருவர் கூட முஸ்லிம், கிறுஸ்துவர் மற்றும் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. இருப்பினும், மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள கிறிஸ்துவ மற்றும் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மக்கள் தொகையில் 14 சதவிகிதம் கொண்ட முஸ்லிம் மக்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்காதது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.