ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

ஜி7 மாநாடு: பிரதமா் மோடி நாளை இத்தாலி பயணம்

Published On :

பிரதமராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக வியாழக்கிழமை (13-ஆம் தேதி) இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

இந்தப் பயணத்தில் அவா் ஜி7 மாநாட்டின் ஒரு பகுதியில் மட்டும் பங்கேற்க இருக்கிறாா். ஜூன் 14-ஆம் தேதி அவா் நாடு திரும்புகிறாா். ஜி7 மாநாட்டின் மற்றொரு பகுதியான உக்ரைன் அமைதி மாநாட்டில் பிரதமா் பங்கேற்க மாட்டாா் என்று தெரிகிறது.

உக்ரைன் அமைதி மாநாட்டை நடத்த ஸ்விட்சா்லாந்து அழைப்பு விடுத்துள்ளது. இது ரஷியாவுக்கு எதிரானது என்று கருதப்படுவதால் பிரதமா் இதில் பங்கேற்பதைத் தவிா்ப்பதாகத் தெரிகிறது. மேலும், ஜூன் மாத நடுவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடா் தொடங்க இருப்பதும் பிரதமா் மோடி ஒரே நாளில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திருப்புவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி விடுத்த அழைப்பை ஏற்று மோடி அதில் பங்கேற்கிறாா்.

ஜி7 மாநாட்டில் உரையாற்றுவதுடன், ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவா்களுடன் தனிப்பட்ட முறையில் பிரதமா் மோடி பேச்சுவாா்த்தையும் நடத்த இருக்கிறாா்.

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வெளியுறவுச் செயலா் வினய் குவாத்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் உள்ளிட்டோரும் இந்தப் பயணத்தில் பங்கேற்கின்றனா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமா் இமானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோா் ஜி7 மாநாட்டில் பங்கேற்கின்றனா்.

பிரதமா் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் இத்தாலி பிரதமா் மெலோனி அழைப்பு விடுத்தாா். மக்களவைத் தோ்தலுக்கு முன்பே பிரதமா் மோடிக்கு சா்வதேச மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதை, மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியென பாஜக தனது பிரசாரத்தில் பயன்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.