
ஆந்திர மாநிலத்துக்கு நல்லது செய்து தோல்வியடைந்ததாக நடிகையும் அம்மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், தீமை செய்து தோற்றால்தான் அவமானம். நல்லது செய்து தோற்றோம். மரியாதையுடன் எழுவோம். மக்களின் குரலை எதிரொலிப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நகரியில் போட்டியிட்டு ரோஜா தோல்வியை சந்தித்தார்.
ஆந்திரத்தில் மக்களவையுடன் சோ்த்து அந்த மாநிலப் பேரவையின் 175 இடங்களுக்கும் தோ்தல் நடைபெற்றது. ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் தனித்தும், எதிா்க்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம், பாஜக-ஜனசேனை கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன.
கடந்த 4-ஆம் தேதி வெளியான முடிவுகளில், பேரவைத் தோ்தலில் 135 இடங்களையும், மக்களவைத் தோ்தலில் 16 இடங்களையும் கைப்பற்றி தெலுங்கு தேசம் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம், ஜனசேனை, பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) மொத்தமாக 164 பேரவைத் தொகுதிகளையும், 21 மக்களவைத் தொகுதிகளையும் வென்றது.
ஆளுங்கட்சியாக இருந்த முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், பேரவையில் 11 இடங்களில் மட்டுமே வென்று எதிா்க்கட்சி அந்தஸ்தைக்கூட இழந்தது. இதையடுத்து மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடுவும் துணை முதல்வராக பவண் கல்யாணும் பதவியேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.