பிரதமர் மோடியின் கால்களில் நிதிஷ்குமார் விழுந்தது பிகாருக்கு அவமானம்: பிரசாந்த் கிஷோர்
பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து பிகார் முதல்வர் நிதிஷ் குமார், மாநில மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பிகாரில் உள்ள நவாதா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடியின் கால்களைத் தொட்டு வணங்கினார். நிதிஷ் குமாரின் இந்த செயல் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி இருந்தது.
பிரசாந்த் கிஷோர், நேற்று (ஜூன் 14) பாகல்பூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
அந்த பொதுக்கூட்டத்தில், பிரசாந்த் கூறியதாவது "கடந்த காலங்களில் நிதிஷ் குமாருடன் பணியாற்றிய நான் ஏன் இப்போது அவரை விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் அவருடன் இருந்த முந்தைய காலங்களில் அவர் வேறு மனிதராக இருந்தார். அந்தக் காலங்களில் அவர் சுயமரியாதையுடன் இருந்தார்.
ஒரு மாநிலத்தின் தலைவர் என்பவர் மாநிலத்தின் மக்களின் பெருமையாகத் திகழ்பவர். ஆனால் நிதிஷ் குமார் பிரதமர் மோடியின் கால்களைத் தொட்டு, பிகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு நிதிஷ் குமார் முக்கியப் பங்கு வகிக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிகார் முதல்வர் நிதிஷ் குமார், தனது செல்வாக்கை எவ்வாறு பயன்படுத்துகிறார்? மாநிலத்தின் நன்மைக்காக, தனது செல்வாக்கைப் பயன்படுத்தவில்லை. 2025 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக ஆதரவுடன் வெற்றி பெற்று, தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக பிரதமர் மோடியின் கால்களில் விழுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர் 2015ஆம் ஆண்டுகளில் ஐக்கிய ஜனதா தளத்தில் முக்கிய ஆலோசகராக இருந்தார். பின்வந்த காலங்களில் ஒய்எஸ்ஆர்சிபி, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் திமுக முதலான கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து வந்துள்ளார்.
பின்னர், 2022 ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசிக்க இருப்பதாக எக்ஸ் பக்கத்தில் மறைமுகமான பதிவு ஒன்றினையும் பதிவிட்டிருந்தார். மேலும், பிகார் முழுவதும் 3,000 கி.மீ. நடைப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்தார். இதன்மூலம், 2025 பிகார் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடப் போகிறார் என்ற கருத்துகள் நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.