

பிகாரில் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் நிதியுதவியை ரூ. 2 லட்சமாக மாநில அரசு உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், "மாநிலத்தின் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முக்யா மந்திரி மகிலா ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கம், மாநிலத்தின் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்புக்காக நிதியுதவு வழங்குவதாகும். இதனால், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண் தொழில்முனைவராகுவர்.
இத்திட்டத்தின் முதற்கட்டத்தில், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்கு ரூ. 10,000 வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில், இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 56 லட்சம் பெண்களின் கணக்குகளுக்கு நேரடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ், பெண்கள் தங்கள் தொழிலைத் தொடங்கிய 6 மாதங்களில் உரிய மதிப்பீடு செய்த பிறகு, தேவைக்கேற்ப ரூ. 2 லட்சம் வரை கூடுதல் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொகை அடுத்தடுத்த கட்டங்களாக வழங்கப்படும். தொழில் முன்னேற்றத்துக்கேற்ப, மொத்த தொகையையும் வழங்கலாம்.
இத்திட்டத்தின்கீழ், பயனாளிகள் உற்பத்தி செய்யும் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கான உரிய ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களின் நிலை மேலும் வலுவடைவது மட்டுமல்லாமல், மாநிலத்தில் அவர்கள் சிறந்த வேலைவாய்ப்புகளையும் பெறுவர். மேலும், வேலைவாய்ப்புக்காக மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டியதுமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.