
அமேசான் நிறுவனத்தின் கிடங்குகளில் உழைக்கும் தொழிலாளர்களின் நிலைமை வளர்ந்த நாடுகளைப் போல கூடுதலோ, குறைந்தோ இந்தியாவிலும் ஒரே மாதிரியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாக, அமெரிக்காவிலுள்ள அமேசான் நிறுவனத் தொழிற்கிடங்குகளில் அதீத வேலைப்பளு குறித்தக் குற்றச்சாட்டுகள் தொழிலாளர்களால் எழுப்பப்பட்டு வந்தன.
அதேபோல, தற்போது ஹரியானாவின் மானேசர் பகுதியிலுள்ள கிடங்கிலும் தொழிலாளர்கள் மின்விசிறி இல்லாமல் அதிக நேரம் நின்றுகொண்டு வேலை செய்யவும், ஒரு மணி நேரத்திற்கு 240 ஆர்டர்கள் வரை பேக் செய்ய நிர்பந்திக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மானேசர் பகுதியிலுள்ள அமேசான் தொழிற்கிடங்கில் வேலைப்பளு அதிகமாக இருப்பதாகவும், நீண்ட நேரம் நிற்பதால் தலைசுற்றல், உடல்சோர்வு மற்றும் உடலில் காயங்கள் ஏற்படுவதாகத் தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், வேலை நேரம் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு கழிவறைக்குச் செல்வதற்குக் கூட அபராதம் விதிக்கப்படுவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அங்கு வேலை செய்யும் 24 வயது தொழிலாளி ஒருவர் கூறுகையில், வேலையில் குறிப்பிட்ட இலக்கை முடிக்கும் வரை கழிவறைக்குச் செல்வதைத் தவிர்க்க தினசரி உறுதிமொழி எடுக்குமாறுக் கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளார். மேலும், இந்த இலக்கில் பெரிய ட்ரக்குகளில் இருந்து இறக்கப்படும் பார்சல்களும் அடங்கும். அதிக உடலுழைப்பைக் கோரும் வேலைகளை வெப்ப அலையின் போது 50 டிகிரி வெப்பத்தில் வேலை செய்யச் சொல்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமேசான் இந்தியாவின் செய்திதொடர்பாளர் கூறுகையில், தொழிலாளர்களின் பாதுகாப்பு, உடல்நலன் தொடர்பாக நிறுவனம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வெப்ப சோதனைக் கருவி வைத்துத் அறை வெப்பநிலையைத் தொடர்ந்துக் கண்காணித்து குளிரூட்டப்படுவதாகவும், தொழிலாளர்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் கழிப்பறை இடைவேளை, ஒய்வு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2023 மார்ச் மாதம் கார்டியன் இதழ் வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவின் ’தொழில்முறை பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம்’ எனும் ஒழுங்குமுறை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அமேசானின் குறிப்பிட்ட 6 தொழிற்கிடங்குகளில் டிசம்பர் 2022, ஜனவரி 2023, பிப்ரவரி 2023 காலங்களில் அங்கு நேர்ந்த பாதுகாப்பற்றச் சூழல், பணியிட அபாயங்கள், உடல்நலன் குறித்தத் தவறான அறிக்கைகள் குறித்துப் பேசப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 2021-ம் ஆண்டில், ஒரு தொழிற்கூடத்தில் 100 தொழிலாளர்களில் சராசரியாக 7.7 பேருக்கு சாதாரண காயங்கள் ஏற்படுவதாகவும், 6.8 பேருக்கு படுகாயம் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆறு தொழிற்கிடங்குகளில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த அறிக்கைகள் சரியாக தெரிவிக்கப்படாமல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, கடந்த ஏப்ரலில் கார்டியன் வெளியிட்ட செய்தியில், அமேசான் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து தொழிற்சங்கம் ஆரம்பிக்கப் பரவலாக யோசித்து வருவதால், அந்த நிறுவனம் மோசமானத் தந்திரங்களைக் கையிலெடுப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிற்கிடங்கின் உள்ளே இணையும் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில், சட்டவிரோதத் தாக்குதல்களாலும், தவறானக் கருத்துக்களைப் பரப்பியும் பணிநீக்கம் செய்வதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.