ரயில் விபத்து: ஓட்டுநர்கள் மீது புகார் அளித்த சம்பவத்தில் திடீர் திருப்பம்!
மேற்கு வங்க ரயில் விபத்தில் ஓட்டுநர்கள் மீது புகார் அளித்த பெண் மறுப்பு


மேற்கு வங்க மாநிலம் புதிய ஜல்பைகுரி ரயில் விபத்தில், ரயில் ஓட்டுநர்கள் மீது ரயில்வே காவல்துறை வழக்குப் பதிவு செய்ததில் திடீர் திருப்பமாக, புகார் அளித்ததாகக் கூறப்பட்ட பெண் பயணி, தன்னிடம் வெற்றுக் காகிதத்தில் ரயில்வே காவலர்கள் கையெழுத்து வாங்கி புகார் புதிவு செய்திருப்பதாகக் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் டாா்ஜீலிங் மாவட்டத்தில் புதிய ஜல்பைகுரி சந்திப்பு ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை காலை 8.45 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் பின்பக்கமாக மோதிய விபத்தில், பயணிகள் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக, விபத்தில் சிக்கிய ரயிலில் பயணம் செய்த பெண் பயணி சைதாலி மஜும்தார் என்பவர் புகார் அளித்ததாகக் கூறி, இரண்டு ரயில் ஓட்டுநர்களுக்கு எதிராக ரயில்வே காவலர்கள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்தனர். அந்த புகாரில், இரண்டு ரயில் ஓட்டுநர்களின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டிருந்தது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சரக்கு ரயிலின் தலைமை ஓட்டுநர் விபத்தில் மரணமடைந்துவிட, உதவி ஓட்டுநர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், பெண் பயணி அளித்த புகாரின் அடிப்படையில் ரயில்வே காவல்துறை உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பான செய்திகளும் வெளியாகியிருந்த நிலையில், தான் அப்படி ஒரு புகாரை அளிக்கவில்லை என்று சைதாலி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும், மருத்துவமனையில் இருந்த போது, ரயில்வே காவலர்கள் வந்து தனது விவரங்களை விசாரித்துக் கொண்டு, வெற்றிக் காகிதத்தில் கையெழுத்திடச் சொன்னதாகவும், அதில் கையெழுத்திட்ட நிலையில், அதை அவர்கள் புகார் மனுவாக மாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான், ரயில் ஓட்டுநர்கள் மீது புகார் அளித்திருப்பது செய்திகளைப் பார்த்துத்தான் அறிந்துகொண்டதாகவும், யாரையும் தனக்குத் தெரியாது, தான் எதற்காக புகார் அளிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நான் மருத்துவமனையில் இருந்தபோது, எப்படி காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடியும் என்றும் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இப்பயணியின் குற்றச்சாட்டுக்கு ரயில்வே காவலர்கள் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் வரப்பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...