
பிகாரில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக அதிகரித்த திருத்த சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.
பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு கடந்தாண்டு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 65 சதவிகிதமாக இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு அளித்திருந்த நிலையில், நீதிபதிகள் வினோத் சந்திரன் மற்றும் ஹரீஷ் குமார் அமர்வு விசாரணை நடத்தி இன்று தீர்ப்பு வழங்கினர்.
அந்த தீர்ப்பில், அரசியல் சாசனம் வழங்கிய சம உரிமையை இந்த திருத்தச் சட்டம் பின்பற்றவில்லை என்பதால், 65 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் திருத்தத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர்.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் கடந்தாண்டு கூட்டணி வைத்து ஆட்சி அமைத்திருந்த முதல்வர் நிதீஷ் குமார், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டதுடன், இடஒதுக்கீட்டையும் 65 சதவிகிதமாக அதிகரித்து சட்டப்பேரவையில் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு 43%, எஸ்சி பிரிவினருக்கு 20%, எஸ்டி பிரிவினருக்கு 2% என மொத்தம் 65 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டிருந்தது.
தற்போது, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகு பாஜக ஆதரவுடன் நிதீஷ் குமார் முதல்வராகியுள்ள சூழலில், இடஒதுக்கீடு திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நிதீஷ் குமார் மேல்முறையிட்டு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.