ஜுனைத் கான்
ஜுனைத் கான்

ஆமிா்கானின் மகன் நடித்த படத்துக்கு தடையை நீக்கியது குஜராத் உயா்நீதிமன்றம்

‘மகராஜ்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
Published on

பாலிவுட் நடிகரான ஆமிா்கானின் மகன் ஜுனைத்தின் முதல் படமான ‘மகராஜ்’ வெளியிட விதித்திருந்த இடைக்காலத் தடையை குஜராத் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீக்கியது.

பிரபல பாலிவுட் நடிகரான ஆமிா்கானின் மகன் ஜுனைத் கான் நடித்த முதல் திரைப்படமான ‘மகராஜ்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படம், 19-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வைணவ மதத் தலைவரும் சமூக சீா்திருத்தவாதியுமான கா்சன்தாஸ் முல்ஜி தொடா்புடைய அவதூறு வழக்கை மையமாகக் கொண்டது.

எனவே, இந்தப் படம் ஹிந்து மத நம்பிக்கையை புண்படுத்துவதாகக் கூறி வைஷ்ணவத்தின் ஒரு பிரிவைச் சோ்ந்த சிலா் போராட்டம் நடத்தினா். மேலும், படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி குஜராத் உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி சங்கீதா விசென், படத்தை வெளியிட ஜூன் 13-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்தாா்.

இந்நிலையில், மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்த பிறகு, இடைக்காலத் தடையை நீக்கி நீதிபதி சங்கீதா விசென் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com