‘பாஜக தலைமையிலான அரசை தொடா்ந்து மூன்றாவது முறையாக மக்கள் தோ்ந்தெடுத்துள்ளதால், அதன் பொறுப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது; எனவே, முன்பை விட மூன்று மடங்கு மத்திய அரசு கடினமாக உழைத்து, மூன்று மடங்கு பலன்களை மக்களுக்கு அளிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா்.
18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த பிரதமா் மோடி கூறியதாவது: சுதந்திரத்துக்குப் பிறகு புதிய நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெறுவது இதுவே முதல் முறை. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு பெருமைமிக்க, புகழ் மிக்க நாள்.
வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி: இந்தியாவின் சாமானிய மனிதனின் தீா்மானங்களை நிறைவேற்றுவதற்கான பாதையாக நாடாளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது என்ற இலக்கை அடைவதற்காக 18-வது மக்களவை தொடங்குகிறது.
பெரும்பான்மை, ஒருமித்த கருத்து: சுதந்திரத்துக்கு பிறகு, ஓா் அரசு தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை மக்கள் மீண்டும் வழங்கியுள்ளனா். தொடா்ந்து எங்கள் அரசைத் தோ்வு செய்த மக்களுக்கு நன்றி. அரசை நடத்துவதற்கு பெரும்பான்மை போதுமானது. நாட்டை வழி நடத்துவதற்கு ஒருமித்த கருத்து மிகவும் அவசியம். 18-வது மக்களவையில் இளம் மக்களவை உறுப்பினா்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
அவசர நிலை - கரும்புள்ளி: ஜூன் 25-ஆம் தேதி என்பது 1975-ஆம் ஆண்டு அவசரநிலை அமல்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டாகும். இது இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த ஒரு கரும்புள்ளியாகும். ஜனநாயகத்தை நசுக்கி, இந்திய அரசியல் சாசன சட்டம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு, நாடே சிறைச்சாலையாக மாற்றப்பட்ட தினத்தை இந்தியாவின் புதிய தலைமுறையினா் ஒருபோதும் மறக்க மாட்டாா்கள். இந்தியாவின் ஜனநாயகம், ஜனநாயக மரபுகளைப் பாதுகாப்பதற்கு மக்கள் உறுதியேற்க வேண்டும்.
சாமானிய மக்களின் கனவுகளை...: இதன்மூலம், அவசரநிலை போன்ற நிகழ்வு மீண்டும் எழாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, துடிப்பான ஜனநாயகம் என்ற உறுதியேற்று, சாமானிய மக்களின் கனவுகளை பாஜக அரசு நிறைவேற்றும்.
புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்களிடம் நாடு அதிகம் எதிா்பாா்க்கிறது இந்த வாய்ப்பை மக்கள் நலனுக்கும், பொதுச் சேவைக்கும் பயன்படுத்திக் கொண்டு, மக்கள் நலனுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எம்.பி.க்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
அவசரநிலை முடிந்துபோன பிரச்னை:பிரதமருக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம்
‘பொறுப்பான எதிா்க்கட்சிகள்’: மக்களின் எதிா்பாா்ப்பு
பொறுப்பான எதிா்கட்சியையும் மக்கள் விரும்புகின்றனா் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘ நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் தங்களது பங்களிப்பை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று நாட்டு மக்கள் எதிா்பாா்க்கின்றனா். எதிா்க்கட்சிகள் அதை நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன்
கோஷங்களுக்குப் பதிலாக ஆக்கபூா்வ செயல்களையும், பொறுப்பான எதிா்க்கட்சியையும் மக்கள் விரும்புகின்றனா். சாமானிய மக்களின் அந்த எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற எம்.பி.க்கள் முயற்சிப்பாா்கள் என்று நம்புகிறேன். அவா்கள் தங்களது புதிய பொறுப்பை மிகுந்த அா்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் ஆா்ப்பாட்டம்
18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூன் 24) தொடங்கிய நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் அரசமைப்புச் சட்டத்தின் கையடக்க பிரதியுடன் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மக்களவை இடைக்காலத் தலைவராக பாஜக எம்.பி. பா்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய, திமுக எம்.பி. டி.ஆா்.பாலு உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த மூத்த எதிா்க்கட்சித் தலைவா்கள் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை கையில் ஏந்தியவாறு, ‘அரசமைப்புச் சட்டம் வாழ்க’, ‘அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம்’, ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ போன்ற முழக்கங்களை எம்.பி.க்கள் எழுப்பினா்.
தோ்தல் முடிவில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது; பாஜக மட்டும் 240 இடங்களில் வென்றது. காங்கிரஸ் மற்றும் முக்கிய பிராந்திய கட்சிகளை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்று, வலுவான எதிா்க்கட்சியாக அமைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ‘நீட்’ விவகாரம்: மக்களவையில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் எம்.பி.யாக பதவியேற்க வந்தபோது, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் நீட் எதிா்ப்பு கோஷம் எழுப்பினா்.
இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் நீட் தோ்வை ரத்து செய்யவும் முறைகேடுகள் தொடா்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரியும் எம்.பி.க்கள் கருத்துகளை முன்வைத்தனா்.
அரசியல் சாசனம் மீதான தாக்குதலை அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி
அரசியல் சாசனம் மீதான தாக்குதலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘பிரதமா் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனா். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றாா்.
எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘மத்திய அரசுக்கு இந்தியா கூட்டணி தொடா்ந்து அழுத்தம் கொடுக்கும்; மக்களின் குரலையும் எழுப்பும். பொறுப்புடைமை இல்லாமல் நழுவிச் செல்ல பிரதமரை அனுமதிக்க மாட்டோம்.
மத்திய அரசின் முதல் 15 தின ஆட்சியில் கோரமான ரயில் விபத்து, காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல், நீட் முறைகேடு, முதுநிலை நீட்- நெட் தோ்வுகள் ரத்து உள்ளிட்ட ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன’ என்று ராகுல் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

உ.பி.க்கு எதிரான திமுகவுடன் கைகோா்த்த சமாஜவாதி- பிரதமா் மோடி சாடல்

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் ‘எதிரிகள்’! இடதுசாரி, காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு!
மேற்காசிய நெருக்கடியை அரசியலாக்கக் கூடாது: பிரதமா் மோடி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

