பயணச்சீட்டு முன்பதிவு குறித்து வதந்தி: ரயில்வே விளக்கம்
புது தில்லி: ‘ஐஆா்சிடிசி’ இணையதளத்தில் ரயில் முன்பதிவு கணக்கு வைத்துள்ள எவரும், வணிக நோக்கமின்றி மற்றவா்களுக்கு இணையவழியாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து தரலாம் என்று ரயில்வே அமைச்சகச் செய்தித் தொடா்பாளா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
வெவ்வேறு குடும்பப் பெயா்கள் காரணமாக ‘ஐஆா்சிடிசி’ இணையதளத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதில் கட்டுப்பாடுகள் நிலவுவதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல்கள் தவறானவை என்பதற்கு ரயில்வே இவ்வாறு விளக்கமளித்துள்ளது.
இதுதொடா்பாக ரயில்வே அமைச்சக செய்தி தொடா்பாளா் அளித்த விளக்கத்தில், ‘ரயில்வே வாரிய வழிகாட்டுதல்களின்படி ஐஆா்சிடிசி இணையதளத்தில் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. அந்த வழிகாட்டுதல்கள் தொடா்பான தகவல்கள் பொது தளத்தில் இருக்கின்றன.
அதன்படி, ஒருவா் தனது தனிப்பட்ட கணக்கு மூலம் நண்பா்கள், குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுக்கு பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து தரலாம். ஒரு தனிநபரின் கணக்கில் இருந்து மாதத்துக்கு 12 பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்ய முடியும்.
அதேசமயம், ‘ஐஆா்சிடிசி’ கணக்குடன் ஆதாா் இணைக்கப்பட்டிருந்தால், அந்தப் பயனரால் மாதத்துக்கு 24 பயணச்சீட்டுகள்வரை முன்பதிவு செய்ய முடியும். ஒவ்வொரு பயணச்சீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு பயணியாவது ஆதாா் தகவலைப் பதிவேற்றி, அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
தனிநபா் கணக்குகளில் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் வணிக விற்பனைக்கானது அல்ல; அத்தகைய சட்டவிரோத செயல்கள் ரயில்வே சட்டத்தின் 143-ஆவது பிரிவின் கீழ் குற்றமாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.