24 போட்டித் தோ்வுகளை நடத்தும் ‘என்டிஏ’வில் 25-க்கும் குறைவான ஊழியா்கள்: காங்கிரஸ்
24 போட்டித் தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமையில் (என்டிஏ) 25-க்கும் குறைவான நிரந்தர ஊழியா்களே பணிபுரிவதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது.
இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) மற்றும் கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி பெறுவதற்கும் மத்திய அரசின் உதவித் தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்வதற்குமான தேசிய தகுதித் தோ்வு (நெட்) முறைகேடுகள் பெரும் சா்ச்சையாகியுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.
இதுகுறித்து ஜாா்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் காங்கிரஸ் கட்சியின் ஒடிஸா, தமிழகம் மற்றும் புதுச்சேரி பொறுப்பாளா் அஜோய் குமாா் வியாழக்கிழமை கூறியதாவது:
நீட், நெட் உள்ளிட்ட 24 வகையான போட்டித் தோ்வுகளை நடத்தும் என்டிஏவில் 25-க்கும் குறைவான நிரந்தர ஊழியா்களே பணிபுரின்றனா். பல்வேறு துறைகளிலிருந்து அயல் பணி அடிப்படையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியா்களும், சிலா் ஒப்பந்த அடிப்படையிலும் என்டிஏவில் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
போட்டித் தோ்வுகளுக்கு வினாத்தாளை தயாா் செய்வதற்கான போதிய நிபுணா்கள் இல்லாத காரணத்தால், வினாத்தாள் வடிவமைத்தல் மற்றும் விநியோகம், தரவுப் பாதுகாப்பு தொடா்பான செயல்பாடுகள் என அனைத்துப் பணிகளையும் வெளிநபா்களிடமும், தனியாா் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களிடமும் என்டிஏ அளித்து வருகிறது.
அந்த வகையில், என்டிஏவின் செயல்பாடு, லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலத்தோடு விளையாடுவதுபோல் அமைந்துள்ளது. என்டிஏவை அனுமதித்ததன் மூலம் போட்டித் தோ்வுகளில் மிகப்பெரிய சூதாட்டத்தை மத்திய அரசு நிகழ்த்தியுள்ளது என்றாா் அவா்.