பிகாரில் மற்றொரு பாலம் இடிந்தது! 10 நாள்களில் 4-வது!

பிகாரில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது 10 நாள்களில் இது நான்காவது சம்பவமாகும்.
பிகாரில் மற்றொரு பாலம் இடிந்தது! 10 நாள்களில் 4-வது!
Published on
Updated on
2 min read

பிகாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி புதன்கிழமை இடிந்து விழுந்தது. பிகாரில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது கடந்த 10 நாள்களில் இது நான்காவது சம்பவமாகும்.

13 ஆண்டுகள் பழமையான ஒரு பாலம் பான்ஸ்பரி ஷ்ரவன் சௌக் அருகே மரியா ஆற்றின் கிளை நதியில் கட்டப்பட்டுள்ளது. இங்கு தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக 70 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு மாநில ஊரக வளர்ச்சித் துறையால் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழும் விடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. விடியோவில், பாலத்தின் நடுப்பகுதி இடிந்து ஆற்றில் விழுவதுபோலவும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதுகுறித்து மாவட்ட குற்றவியல் நீதிபதி துஷார் சிங்லா கூறுகையில், “பஹதுர்கஞ்ச் தொகுதியில் அமைந்துள்ள பாலம் 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்டது.

2011 ஆம் ஆண்டு கங்கை நதியை மகாநந்தாவுடன் இணைக்கும் சிறிய துணை நதியான மரியா மீது இந்தப் பாலம் கட்டப்பட்டது. நேபாளத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால் திடீரென நீர்மட்டம் உயர்ந்து, பாலத்தின் தூண்கள் உடைந்தது.

பாலம் கட்டுமானப் பணியில் தரமற்றப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தது. பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்காக திறக்கப்பட்ட பாலம், சேதமடைந்த நிலையில், மீண்டும் 6 ஆண்டுகள் கழித்து திறக்கப்பட்டது” என்றார்.

அராரியா மாவட்டத்தில் ஜூன் 18 ஆம் தேதி ரூ. 12 கோடி மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட சுமார் 180 மீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்தது. சிவான் மாவட்டத்தில் ஜூன் 22 ஆம் தேதி தரவுண்டா மற்றும் மகாராஜ்கஞ்ச் பகுதிகளின் கிராமங்களை இணைக்கும் ஒரு சிறிய பாலமும் இடிந்து விழுந்தது. இதேபோன்று, கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள கோரசஹான் பிளாக் பகுதியில் ஜூன் 23 ஆம் தேதி, கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த ஒரு சிறிய பாலம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

பிகார் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து பாலங்கள் மற்றும் மதகுகள் குறித்த அறிக்கையைப் பெற, மாநில அரசின் ஊரகப் பணித் துறையினர் ஆய்வுக் கூட்டம் நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அடிக்கடி நடக்கும் பாலம் இடிந்து விழும் சம்பவங்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com