
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த இந்தியா கூட்டணி விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, ''நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கானது இந்த விடியோ. நீட் தேர்வு வினாத்தாள் வெளியாகி முறைகேடு நடந்துள்ளது. மருத்துவத் துறையில் நுழைய வேண்டும் என்ற லட்சியம் மற்றும் நீண்டநாள் கனவுடன் ஆண்டு முழுவதும் படிக்கும் மாணவர்களின் கனவு அழிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியமானது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒருநாள் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி கூட்டத்தில் முடிவு செய்தோம். அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான வகையில் விவாதம் நடத்த வேண்டும் என நினைத்தோம்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினேன். ஆனால் அதற்கு அனுமதிக்கப்படவில்லை. 2 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆண்டுகளில் 17 வினாத்தாள் கசிந்துள்ளது. இந்த நிர்வாக அமைப்பில் பிரச்னை உள்ளது தெளிவாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் முடிவு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் விவாதத்தின் நோக்கம்.
நீட் தேர்வு முறைகேடு நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்களின் குடும்பங்களை பாதித்துள்ளது. லட்சக்கணக்கான குடும்பங்களை கவலை அடையச் செய்துள்ளது மிக முக்கியமான பிரச்னை.
மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என பிரதமரை கேட்டுக்கொள்கிறேன். ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த இந்தியா கூட்டணி விரும்புகிறது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை இன்று காலை கூடியதும், முதலில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனு மூலம் கோரிக்கை வைத்தனர்.
ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையுடன் சேர்த்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
பிகார் போன்ற மாநிலங்களில் வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் நடைபெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
நாடு முழுவதும் நீட் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடைபெறவிருந்த பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித்தேர்வு (யுஜிசி-நெட்) மற்றும் நீட் முதுகலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.