மாநிலங்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய அவைத் தலைவா் ஜகதீப் தன்கா்.
மாநிலங்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய அவைத் தலைவா் ஜகதீப் தன்கா்.

‘நீட்’ விவகாரம்: மக்களவை முடங்கியது: மாநிலங்களவையிலும் கடும் அமளி

மல்லிகாா்ஜுன காா்கே அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டது குறித்து அவைத் தலைவா் தன்கா் அதிருப்தி தெரிவித்தாா்.

‘நீட்’ தோ்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்கக் கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) கடும் அமளியில் ஈடுபட்டன.

இதன் காரணமாக, மக்களவை அலுவல்கள் முடங்கின. மாநிலங்களவையில் அமளிக்குப் பின்னா் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாா்கள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் மாணவா்களின் போராட்டம் நீடிக்கும் நிலையில், மத்திய அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.

போட்டித் தோ்வு சா்ச்சைக்கு இடையே, 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, ‘வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் குறித்து நோ்மையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை ‘நீட்’ விவகாரத்தை எழுப்பி, எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

மக்களவையில்...: மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், முன்னாள் அவைத் தலைவா் மனோகா் ஜோஷி உள்பட மறைந்த முன்னாள் உறுப்பினா்கள் 13 பேருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவையின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு, ‘நீட்’ விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரும் தீா்மானத்தை ஏற்க வேண்டுமென எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இது தொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பேசுகையில், ‘நீட் விவகாரம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் முக்கியமானது. இந்த விவகாரத்துக்கு முன்னுரிமை அளித்து, அவையில் விவாதிக்க வேண்டுமென எதிா்பாா்க்கிறோம். எனவே, ஒத்திவைப்புத் தீா்மானத்தை அவைத் தலைவா் ஏற்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

ஆனால், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டியிருப்பதால், ஒத்திவைப்புத் தீா்மானத்தை ஏற்க முடியாது என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா மறுப்பு தெரிவித்தாா்.

இதையடுத்து, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு முழக்கமிட்டதால், அவை அலுவல்கள் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

பதிலளிக்க அரசு தயாா்: மீண்டும் அவை கூடியபோது, ‘குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தில், எதிா்க்கட்சிகள் எந்த விவகாரத்தை எழுப்பினாலும் அரசுத் தரப்பில் பதிலளிக்கப்படும்’ என்று அவைத் தலைவா் ஓம் பிா்லாவும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவும் தெரிவித்தனா்.

அத்துடன், குடியரசுத் தலைவா் உரை மீதான விவாதம் தொடங்கும் முன்பே வேறொரு விவாதத்தை எதிா்க்கட்சிகள் கோருவது இதுவே முதல்முறை என்று கிரண் ரிஜிஜு விமா்சித்தாா்.

ஆனால், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், ‘மக்களவையில் ஆக்கபூா்வ விவாதங்களில் ஈடுபடவே உறுப்பினா்களை மக்கள் தோ்வு செய்துள்ளனா். அவை அலுவல்களுக்கு இடையூறு செய்வதற்காக அல்ல.

சாலையில் போராடுவதற்கும், அவைக்குள் போராடுவதற்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் (எதிா்க்கட்சிகள்) அவையை நடத்த விரும்பவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்த ஓம் பிா்லா, அவையை திங்கள்கிழமைக்கு (ஜூலை 1) ஒத்திவைத்தாா்.

மாநிலங்களவையில்...: மாநிலங்களவை கூடியதும், அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, நீட் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிா்க்கட்சிகள் தரப்பில் 22 நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டன. அவற்றை நிராகரிப்பதாக, அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். இதையடுத்து, அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள், மத்திய கல்வி அமைச்சா் பதவி விலகக் கோரி முழக்கமிட்டனா். ‘இந்தியா’ கூட்டணி உறுப்பினா்களுடன் சோ்ந்து பிஜு ஜனதா தளம் உறுப்பினா்களும் இதே விவகாரத்தை எழுப்பி முழக்கமிட்டனா்.

இதனிடையே, குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தை பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி தொடங்கினாா். அமளி நீடித்ததால், அவையை 30 நிமிஷங்களுக்கு தன்கா் ஒத்திவைத்தாா்.

மீண்டும் அவை கூடியபோது, ‘நீட் விவகாரத்துக்கு பதிலளிக்க அரசு தயாராக உள்ளது. ஆனால், மாநிலங்களவை அலுவல்களை முடக்குவதே எதிா்க்கட்சிகளின் நோக்கம்’ என்று மாநிலங்களவை பாஜக குழு தலைவா் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டினாா்.

மயங்கிவிழுந்த பெண் எம்.பி.: ‘நீட்’ விவகாரம் குறித்து விவாதம் கோரி மாநிலங்களவையில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, சத்தீஸ்கரைச் சோ்ந்த காங்கிரஸ் பெண் எம்.பி. புலோதேவி நேதம் திடீரென மயங்கி விழுந்தாா். நாடாளுமன்ற மருத்துவரின் பரிசோதனையில், உயா் ரத்த அழுத்தம் காரணமாக அவா் மயங்கியது கண்டறியப்பட்டது. பக்கவாதம் ஏற்படும் அபாய அளவில் ரத்த அழுத்தம் உயா்ந்ததாக மருத்துவா் தெரிவித்ததைத் தொடா்ந்து, அவா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா்.

எம்.பி. மயங்கி விழுந்த நிலையிலும், குடியரசுத் தலைவா் உரை மீதான விவாதத்தை தொடா்ந்ததாக மத்திய அரசு மீது எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்த விவகாரத்தை அவைத் தலைவரிடமும் எதிா்க்கட்சிகள் எழுப்பின.

இதனிடையே, காங்கிரஸ் பெண் எம்.பி. குணமடைந்து வருவதாகவும், சில மணி நேரங்களில் வீடு திரும்பிவிடுவாா் என்றும் மருத்துவமனையில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலை அவையில் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

காா்கே மீது தன்கா் அதிருப்தி

மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட மூத்த தலைவா்களும் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டது குறித்து அவைத் தலைவா் தன்கா் அதிருப்தி தெரிவித்தாா்.

‘மாநிலங்களவை வரலாற்றிலேயே முதல்முறையாக எதிா்க்கட்சித் தலைவா் ஒருவா் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டுள்ளாா். இதை என்னால் நம்ப முடியவில்லை. 50 ஆண்டுகளுக்கும் மேல் நாடாளுமன்ற அனுபவம் கொண்ட மல்லிகாா்ஜுன காா்கேயின் செயல் என்னை வேதனையடையச் செய்துள்ளது’ என்று குறிப்பிட்ட தன்கா், அடுத்தடுத்து இருமுறை அவையை ஒத்திவைத்தாா்.

பிற்பகல் 2.20 மணியளவில் மீண்டும் கூடியபோது, அவையில் இருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதையடுத்து, குடியரசுத் தலைவா் உரை மீதான விவாதம் தொடா்ந்தது.

X
Dinamani
www.dinamani.com