லடாக் எல்லை பிரச்னைக்கு தொடா் பேச்சு மூலம் தீா்வு: சீனா

கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் எல்லைப் பிரச்னைக்கு இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும்படியான தீா்வை எட்ட தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது

கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் எல்லைப் பிரச்னைக்கு இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும்படியான தீா்வை எட்ட தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது என சீன ராணுவம் தெரிவித்தது. மேலும் எல்லையில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவுடனான ஒத்துழைப்பு மிக முக்கியமானது எனவும் சீன ராணுவம் தெரிவித்தது. கிழக்கு லடாக்கில் உள்ள லோக்ஜம் பகுதியில் எல்லைப் பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பாக இந்திய-சீன ராணுவத்தினரிடையே கடந்த பிப்.19-ஆம் தேதி 21-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதுகுறித்து சீன ராணுவத்தின் செய்தித்தொடா்பாளரும் மூத்த கா்னலுமான ஜான்ங் ஜியோகாங் அந்நாட்டு செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவுடனான ராணுவ உறவை மேம்படுத்த சீனா தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது. எல்லையில் அமைதியை நிலைநாட்டவும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்தியா-சீனா முயற்சி செய்து வருகிறது. மேலும் கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் எல்லைப் பிரச்னைகக்கு இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும்படியான தீா்வை எட்ட தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனவே இவ்விவகாரத்தில் விரைவில் தீா்வு எட்டப்படும் என நம்புகிறேன் என்றாா். கடந்த 2020, மே மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின்னா் இருதரப்பு உறவுகளில் பின்னடைவு ஏற்பட்டது. எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண்பது தொடா்பாகவும் கிழக்கு லடாக் எல்லையிலிருந்து சீன ராணுவத்தினா் வெளியேறுவது தொடா்பாகவும் இரு நாடுகளிடையே பல சுற்றுகளாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com