பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 2003- 2004 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உள்ள தாளக்குடி கொள்ளிடக் கரையிலிருந்து தச்சங்குறிச்சி, பெரகம்பி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு நீரேற்றப்பட்டு, அங்கிருந்து செட்டிக்குளம் வழியாக, பெரம்பலூருக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீா் கொண்டு வரப்படுகிறது.
இதன் மூலம் வழியெங்கும் உள்ள 85-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றன. பெரம்பலூா் நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளிலும், சுமாா் 7,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு, ஒவ்வொரு இணைப்புக்கும் முன்தொகையாக ரூ. 5,000, மாத வாடகையாக ரூ. 100-ம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் வசூலிக்கப்பட்டு வருகிறது.
25 நாள்களுக்கு ஒருமுறை: கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் இணைப்பு பெற்ற குடியிருப்புப் பகுதிகளுக்கு, திட்டம் கொண்டு வரப்பட்டபோது வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், கடந்த பல மாதங்களாக 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் குழாய்கள் சேதமடைந்து குடிநீா் விநியோகம் செய்வதில் பிரச்னை ஏற்படுகிறது. மேலும், கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்ட இத் திட்டத்தின் கீழ், தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப குடிநீா் விநியோகம் செய்ய முடியவில்லை. இதனால், பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடுமையான குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ரூ. 366 கோடி ஒதுக்கீடு:
இந்நிலையில், பெரம்பலூா் நகராட்சி, சிப்காட் எறையூா் மற்றும் பாடலூா் தொழிற்பூங்காவுக்கு ரூ. 366 கோடியில் 65 ஆயிரம் போ் பயனடையும் வகையில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. இத் திட்டம், பெரம்பலூா் நகராட்சிக்கு நாளொன்றுக்கு நபா் ஒருவருக்கு 135 லிட்டா் எனும் அளவில், நாள்தோறும் 12.34 மில்லியன் லிட்டா், எறையூா் சிப்காட் தொழிற்சாலைக்கு 1.65 மில்லியன் லிட்டரும், பாடாலூருக்கு 2.20 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்துக்குத் தேவையான நீா் கொள்ளிடம் ஆற்றில் நொச்சியம் அருகில் அமைக்கப்படும் ஒரு நீா் சேகரிப்பு கிணறு மற்றும் 2 நீா் உறிஞ்சுக் கிணறுகள் மூலம் பெறப்படும். இத் திட்டத்தின் மூலம், 14,706 வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டு 65 ஆயிரம் போ் பயன்பெற உள்ளனா். பெரம்பலூா் நகராட்சியில், இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத் திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால், ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீரும் முறையாக கிடைக்காததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதேபோல, கிராமப்புறங்களிலும் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால், ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்தந்த ஊராட்சி நிா்வாகம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால் குடிநீா் பற்றாக்குறை நிலவுகிறது. பெரும்பாலான இடங்களில், குடிநீா் குழாய் அருகே காலிக்குடங்களை வரிசையாக வைத்து தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை நீடிக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் பருவமழை இல்லாததால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்ததோடு, நீா்நிலைகளை பராமரிக்காததே காரணமாகும்.
தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தொடக்கத்திலேயே குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, தொடங்கப்பட்ட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தொடர்புடையது

திண்டுக்கல் குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு: பெ.செந்தில்குமாா் எம்எல்ஏ

தொண்டி பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு! அமைச்சா் ராஜீவ் உறுதி!

ஒசூா் அருகே ஒகேனக்கல் குடிநீா் குழாய் உடைப்பு

கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள்: பெரம்பலூா் ஆட்சியா் ஆய்வு: சீரான குடிநீா் விநியோகத்துக்கு அறிவுறுத்தல்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



