

தமிழகத்தின் இன்னாள், முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீதான வழக்குகள் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்த மனுதாரர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்த மனுவை கடந்த ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு மற்றும் மாநில காவல் துறை தலைமை இயக்குநர், சிபிஐ உள்ளிட்ட 4 எதிர்மனுதாரர்கள் மனுவின் பராமரிப்புத் தன்மை தொடர்பாக 3 வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கருப்பையா காந்தி தரப்பில் மூத்த வழக்குரைஞர் டி.எஸ். நாயுடு ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் துஷ்யவந்த் தவே, கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர், "இந்தப் பொது நல மனு, விசாரணை நடத்தும் அரசு அமைப்புகளையும், தீர்ப்பு வழங்கியுள்ள நீதிமன்றங்களையும், உச்சநீதிமன்றத்தையும்கூட குற்றம் காண்பதாக உள்ளது. சில வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய ஆறு வழக்குளை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இதில் ஒரு வழக்கு விசாரணைக்கு மட்டும் உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. மற்றொரு வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. முறையான தகவல்கள் இல்லாமல் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்று வாதிட்டனர்.
அப்போது, நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரத்தில் விசாரணை நீதிமன்றங்களில் வெவ்வேறு மட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், மேல்முறையீட்டு வழக்குகள் தொடர்புடைய விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய மனுதாரருக்கு அவகாசம் அளித்து, அடுத்த விசாரணையை ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.