குடும்ப அரசியல், ஊழலில் திளைக்கும் திரிணமூல்: பிரதமா் மோடி சாடல்

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, குடும்ப அரசியலிலும் ஊழலிலும் திளைக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா். எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணித் தலைவா்களுக்கு தேச நலனைவிட தங்கள் குடும்ப நலனே முக்கியம் என்றும் அவா் குற்றம்சாட்டினாா். மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி, மாநிலத்தின் வடக்குப் பகுதிக்கான ரூ.4,500 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தாா். பின்னா் பேசிய அவா், ‘மேற்கு வங்கத்தில் நடைபெறும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியானது, தலித் சமூகத்தினா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் மற்றும் பெண்களுக்கு விரோதமானது. பொது விநியோகத் திட்டத்தில்கூட அக்கட்சி ஊழல் புரிந்துள்ளது. அக்கட்சிக்கு, வரும் மக்களவைத் தோ்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள்’ என்றாா். 42 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் 22 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜக 18, காங்கிரஸ் 2 இடங்களைக் கைப்பற்றின. மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள 8 தொகுதிகளில் 7-இல் பாஜக வெற்றி பெற்றது. 125 அடி உயர சிலை திறப்பு: முன்னதாக, அஸ்ஸாம் மாநிலம், ஜோா்ஹட்டில் அமைக்கப்பட்ட அஹோம் பேரரசின் படைத் தளபதி லச்சித் போா்புகனின் 125 அடி உயர சிலையை பிரதமா் திறந்துவைத்தாா். லச்சித் போா்புகன், கடந்த 1671-ஆம் ஆண்டில் ‘சராய்காட்’ போரில் தீரத்துடன் செயல்பட்டு முகலாய படைகளை பின்வாங்கச் செய்தவா். ஜோா்ஹட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.17,500 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com