கடந்த 26 நாள்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? உச்ச நீதிமன்றம் கேள்வி

கடந்த 26 நாள்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்று எஸ்பிஐ தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on
Updated on
2 min read

புது தில்லி: தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை வெளியிட உத்தரவிட்டு 26 நாள்களாகிவிட்டது. இந்த 26 நாள்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

மிக எளிமையாக திரட்டக்கூடிய தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை தருவதற்கு அவகாசம் கேட்பது ஏன்? என்றும் உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ தரப்பிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறது.

அதாவது, 24க்கும் குறைவாக அரசியல்கட்சிகள்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளன. அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு கால அவகாசம் கோருவது ஏன்? எஸ்பிஐ வங்கியிடமிருந்து நேர்மையான நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எஸ்பிஐ வங்கியால் செய்ய முடியாத எந்த வேலையையும் நாங்கள் சொல்லவில்லை என்றும் நீதிபதிகள் காட்டமான கேள்விகளையும் அறிவுறுத்தல்களையும் வைத்துள்ளனர்.

தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று கூறியதால், ரகசியமாக வைக்கப்பட்டது என்று எஸ்பிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

2019, ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்துத் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பற்றிய விவரங்களைத் தர ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ர ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து இன்று விசாரித்து வருகிறது.

எஸ்பிஐ வங்கித் தரப்பில் வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே ஆஜரானார். அவர் முன்வைத்த வாதத்தில், எங்கள் கோர் பேங்கிங் அமைப்பில், வாங்குபவரின் பெயர் மற்றும் பத்திர எண் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டது. எனவே, தகவலை தொகுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம், முழு செயல்முறையையும் நாங்கள் மாற்றியமைக்க வேண்டும்.

ஆனால், இந்த வாதத்தை ஏற்காத உச்ச நீதிமன்றம், இந்தப் பணியை செய்ய எவ்வளவு காலம் ஆகும் என்று வங்கியைக் கேட்கவில்லை, நாங்கள் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம் என்று கூறியது. எனவே தகவல்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கால அவகாசம் கேட்பது சரியல்ல என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

இதோடு, தகவல் தர தாமதிக்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் விசாரணைக்கு வந்துள்ளது.

தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பற்றிய விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, மார்ச் 4 ஆம் தேதி பாரத ஸ்டேட் வங்கி மனு தாக்கல் செய்தது.

கடந்த பிப். 15 ஆம் தேதி அளித்த வரலாற்றுப் புகழ் பெற்ற தீர்ப்பில், வங்கி மூலம் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பெறுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்து, இந்த நடைமுறையை ரத்து செய்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இந்தத் திட்டத்தின் கீழ் நன்கொடை அளித்தவர்கள் முழு விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி பகிர வேண்டும் என்றும் அவற்றை மார்ச் 13 ஆம் தேதிக்குள் மக்கள் பார்வைக்காகத் தேர்தல் ஆணையம் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இதன் மூலம் இந்த நன்கொடைத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரையிலான காலகட்டத்தில் பயனடைந்த அரசியல் கட்சிகள், அவற்றுக்கு நன்கொடை அளித்தவர்கள் பற்றிய முழு விவரங்களும் (இதுவரை ரகசியம் எனப் பாதுகாக்கப்பட்டவை) மக்களுக்குத் தெரிய வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஜூன் மாதம் வரை கால அவகாசம் கேட்கும் பாரத ஸ்டேட் வங்கியின் கோரிக்கை ஏற்கப்பட்டால், யார், யாருக்கு நன்கொடைகள் வழங்கினார்கள், யார் பெற்றார்கள் என்ற விவரம் மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் வெளித் தெரிய வராமலேயே போய்விடும் ஆபத்து இருக்கிறது. இந்த நிலையில்தான் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

இதுவரையிலும் மொத்தம், ரூ. 16 ஆயிரத்து 518 கோடி பெறுமதியுள்ள தேர்தல் நன்கொடைப் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி விற்றிருக்கிறது. அதாவது, இவ்வளவு பெரிய தொகையும் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு ‘ரகசிய’ நன்கொடைகளான ‘யார் யாராலோ’ வழங்கப்பட்டிருக்கிறது. யார் யார் என்பதை மக்களுக்குத் தெரிவியுங்கள் என்றுதான் கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com