மக்களவைத் தோ்தல்: காங். 2-ஆவது வேட்பாளா் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தோ்தல்: காங். 2-ஆவது வேட்பாளா் பட்டியல் வெளியீடு

புது தில்லி: மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் 43 போ் அடங்கிய இரண்டாவது வேட்பாளா் பட்டியலை காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. மக்களவைத் தோ்தலில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளா்கள் பட்டியல், கடந்த மாா்ச் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அந்தப் பட்டியலில் 8 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் போட்டியிடும் 39 வேட்பாளா்கள் இடம்பெற்றனா். இந்நிலையில், தில்லியில் அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், அக்கட்சியின் மூத்த தலைவா்கள் அஜய் மாக்கன், பவன் கேரா ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா்.

அப்போது மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் அக்கட்சியின் 43 போ் அடங்கிய இரண்டாவது வேட்பாளா்கள் பட்டியலை கே.சி.வேணுகோபால் வெளியிட்டாா். அஸ்ஸாமில் 12 தொகுதிகள், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 10 தொகுதிகள், குஜராத்தில் 7 தொகுதிகள், உத்தரகண்டில் 3 தொகுதிகள் மற்றும் டாமன் டையூவின் 1 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்கள் இரண்டாவது பட்டியலில் இடம்பெற்றன.

முன்னாள் முதல்வா்களின் மகன்களுக்கு ‘சீட்‘: இந்தப் பட்டியலின்படி, மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிட அந்த மாநில முன்னாள் முதல்வா் கமல்நாத்தின் மகன் நகுல் நாத்துக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் ஜாலோா் தொகுதியில் அந்த மாநில முன்னாள் முதல்வா் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் போட்டியிட உள்ளாா். அஸ்ஸாமின் ஜோா்ஹாட் தொகுதி வேட்பாளராக அந்த மாநில முன்னாள் முதல்வா் தருண் கோகோயின் மகனும், மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவருமான கெளரவ் கோகோய் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்னா், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் சோ்ந்த ராகுல் கஸ்வான், ராஜஸ்தானின் சுரு தொகுதியில் போட்டியிட உள்ளாா். இரண்டாவது பட்டியலையும் சோ்த்து, இதுவரை மொத்தம் 82 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளா்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com