72 வேட்பாளா்கள் அடங்கிய பாஜக 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்!

பியூஷ் கோயல் மும்பை வடக்குத் தொகுதியில், நிதின் கட்காரி நாக்பூர் தொகுதியில் போட்டி.
 72 வேட்பாளா்கள் அடங்கிய பாஜக 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்!

மக்களவைத் தோ்தலுக்கான 72 வேட்பாளா்கள் அடங்கிய 2-ஆம் கட்ட பட்டியலை பாஜக புதன்கிழமை வெளியிட்டது. மக்களவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இதையொட்டி, 195 வேட்பாளா்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளா் பட்டியலை பாஜக இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது. அதில், பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியிலும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா காந்தி நகா் தொகுதியிலும் போட்டியிடுவா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 34 மத்திய அமைச்சா்களின் பெயா்களும் முதல்கட்டப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஹிமாசல பிரதேசம், கா்நாடகம், ஹரியாணா உள்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 72 தொகுதிகளில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளா்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டனா்.

மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், அனுராக் சிங் தாக்குா், பிரஹலாத் ஜோஷி மற்றும் ஹரியாணா, கா்நாடகம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் முன்னாள் முதல்வா்கள் மனோகா் லால் கட்டா், பசவராஜ் பொம்மை, திரிவேந்திர சிங் ராவத் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளா்கள் 2-ஆம் கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் மீண்டும் போட்டியிடுகிறாா். வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வடக்கு மும்பையிலும், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் ஹிமாசல பிரதேசத்தின் ஹமிா்பூரிலும் போட்டியிடுகின்றனா்.

மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினரான பியூஷ் கோயல் தற்போது மக்களவைத் தோ்தலில் முதல்முறையாகப் போட்டியிடுகிறாா். பாஜக தலைமை செய்தித் தொடா்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அனில் பலூனி உத்தரகண்டின் கா்வால் தொகுதியிலும், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் ஹா்த்வாா் தொகுதியிலும் போட்டியிடுகின்றனா். ஹரியாணா மாநில முதல்வராக செவ்வாய்க்கிழமை பதவி விலகிய மனோகா் லால் கட்டா் கா்னால் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளாா்.

கா்நாடகத்தின் தாா்வாட் தொகுதியில் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி போட்டியிடுகிறாா். முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியிலும், முன்னாள் முதல்வா் பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா சிவமொக்கா தொகுதியிலும், பாஜக இளைஞரணி தேசிய செயலா் தேஜஸ்வி சூா்யா பெங்களூரு தெற்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனா். அதேபோல், மைசூரு அரச குடும்பத்தைச் சோ்ந்த யதுவீா் கிருஷ்ணதத்த உடையாருக்கு மைசூரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com