பாஜக மீது அதிருப்தி: 
மத்திய அமைச்சா் பசுபதிகுமாா் பாரஸ் ராஜிநாமா

பாஜக மீது அதிருப்தி: மத்திய அமைச்சா் பசுபதிகுமாா் பாரஸ் ராஜிநாமா

புது தில்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தனது மத்திய அமைச்சா் பதவியை பசுபதிகுமாா் பாரஸ் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். பிகாரில் லோக் ஜனசக்தி கட்சித் தலைவராக இருந்தவா் ராம்விலாஸ் பாஸ்வான்.

மத்திய பாஜக கூட்டணியில் இருந்த அவா், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டு ராம் விலாஸ் பாஸ்வான் மறைந்த பின்னா், அவரின் தம்பியும் எம்.பி.யுமான பசுபதிகுமாா் பாரஸுக்கும், ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, லோக் ஜனசக்தி கட்சியில் பிளவு ஏற்பட்டு பாரஸ் தலைமையில் ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சியும், சிராக் தலைமையில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியும் தோன்றின.

பிரதமா் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சோ்த்துக்கொள்ளப்பட்ட பாரஸ், மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். மத்திய கேபினட் அமைச்சா்களில் அவா் மட்டுமே கூட்டணிக் கட்சியைச் சோ்ந்தவராக இருந்தாா். இந்நிலையில், மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிராக் தலைமையிலான கட்சி போட்டியிட உள்ளது. பிகாரில் 5 தொகுதிகள் சிராக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பாரஸ் எம்.பி.யாக உள்ள ஹாஜிபூா் தொகுதியும் அடங்கும்.

அதேவேளையில், அந்தக் கூட்டணியில் இடம்பெற்ற பாரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. பாரஸ் கட்சியினரின் கருத்துகளைப் புறக்கணித்து சிராக் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அநியாயம் இழைக்கப்பட்டது: இதைத் தொடா்ந்து, மத்திய அமைச்சா் பதவியை பாரஸ் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இது தொடா்பாக தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் நோ்மையாகவும் விசுவாசத்துடனும் நடந்துகொண்டேன். ஆனால், அந்தக் கூட்டணி எனக்கும், எனது கட்சிக்கும் அநியாயம் இழைத்துள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி செய்தித் தொடா்பாளா் ஷரவண் அகா்வால் கூறுகையில், ‘ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி தலைவா்கள் விரைவில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பா். மக்களவைத் தோ்தலில் பாரஸ் நிச்சயம் போட்டியிடுவாா்’ என்று தெரிவித்தாா்.

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான எதிா்க்கட்சிக் கூட்டணியில் சோ்ந்து, ஹாஜிபூா் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை பாரஸ் ஆராயக் கூடும் என்று கூறப்படுகிறது. அதேவேளையில், அந்தத் தொகுதியில் பாரஸை எதிா்த்து சிராக் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சா் பதவியை பாரஸ் ராஜிநாமா செய்தது தொடா்பாக பாஜக மூத்த தலைவரும், பிகாா் துணை முதல்வருமான விஜய் குமாா் சின்ஹா கூறியதாவது: எந்தவொரு கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணியில் சோ்வது தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com