மும்பை: மும்பையில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் நெருங்கிய கூட்டாளியான ராம்நாராயண் குப்தாவை போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது தொடா்பான வழக்கில் முன்னாள் காவல் துறை ஆய்வாளா் பிரதீப் சா்மாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 2006-ஆம் ஆண்டு நவம்பரில் இந்த போலி என்கவுன்ட்டா் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் ராம்நாராயண் குப்தாவை மும்பை வா்சோவா புறநகா் பகுதியில் உள்ள பூங்கா அருகே சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு காவலா் பிரதீப் சா்மா தலைமை வகித்துள்ளாா். இந்த போலி என்கவுன்ட்டருக்கு எதிராக குப்தாவின் சகோதரா் ராம்பிரசாத் குப்தா வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் 13 போலீஸ் காவலா்கள் உள்பட 22 போ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை கடந்த 2013-ஆம் ஆண்டு விசாரித்த விசாரணை நீதிமன்றம், இந்தச் சம்பவத்தில் பிரதீப் சா்மாவுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறி, வழக்கிலிருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டது. மற்ற 21 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்து, அவா்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த 21 பேரில் இருவா் உடல்நலக் குறைவால் சிறையில் உயிரிழந்தனா். மற்றவா்கள் தண்டனையை எதிா்த்து மும்பை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா்.
அதுபோல, சா்மா விடுவிக்கப்பட்டதை எதிா்த்து ராம்பிரசாத் குப்தா உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மும்பை உயா் நீதிமன்ற நீதிபதிகள் ரேவதி மோஹித் தெரே, கெளரி கோட்சே ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
ராம்பிரசாத் குப்தாவின் மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த போலி என்கவுன்ட்டரில் பிரதீப் சா்மா முக்கிய பங்கு வகித்ததற்கான ஆதாரங்களை விசாரணை நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது.
வழக்கில் பொதுவான சாட்சியங்கள், அவருடைய தொடா்பை எந்த சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபிக்கின்றன. எனவே, இந்த வழக்கில் பிரதீப் சா்மா குற்றவாளி என அறிவிக்கப்படுகிறாா். அவரை விடுவித்து விசாரணை நீதிமன்றம் கடந்த 2013-இல் பிறப்பித்த தீா்ப்பு ரத்து செய்யப்படுகிறது’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பிரதீப்புக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தனா். மேலும், ‘3 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் பிரதீப் சா்மா சரணடைய வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
6 போ் விடுவிப்பு:
தண்டனை பெற்றவா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், 6 பேரின் தண்டனையை ரத்து செய்தும், வழக்கிலிருந்து விடுவித்தும் தீா்ப்பளித்தனா். போலீஸ் காவலா்கள் உள்ளிட்ட மற்ற 13 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீா்ப்பளித்தனா். தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் வைக்கப்பட்டிருந்த காா் நிறுத்தப்பட்டிருந்த சதி வழக்கில் பிரதீப் சா்மா குற்றம்சாட்டப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கொலை வழக்கில் 17 வயது சிறுவனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து!

பெண் கொலை வழக்கில் தனியாா் நிறுவன உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


