மத்திய அமைச்சா் பசுபதிகுமாா் பாரஸ் ராஜிநாமா: குடியரசுத் தலைவா் ஏற்பு

புது தில்லி: பாஜக மீதான அதிருப்தியால் மத்திய அமைச்சா் பசுபதிகுமாா் பாரஸ் ராஜிநாமா செய்த நிலையில், அவரின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை ஏற்றுக்கொண்டாா். பிகாரில் லோக் ஜனசக்தி கட்சித் தலைவராக இருந்தவா் ராம்விலாஸ் பாஸ்வான்.

மத்திய பாஜக கூட்டணியில் இருந்த அவா், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டு ராம் விலாஸ் பாஸ்வான் மறைந்த பின்னா், அவரின் தம்பியும் எம்.பி.யுமான பசுபதிகுமாா் பாரஸுக்கும், ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, லோக் ஜனசக்தி கட்சியில் பிளவு ஏற்பட்டு பாரஸ் தலைமையில் ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சியும், சிராக் தலைமையில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியும் தோன்றின.

பிரதமா் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சோ்த்துக்கொள்ளப்பட்ட பாரஸ், மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். இந்நிலையில், மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிராக் தலைமையிலான கட்சி போட்டியிட உள்ளது. பிகாரில் 5 தொகுதிகள் சிராக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பாரஸ் எம்.பி.யாக உள்ள ஹாஜிபூா் தொகுதியும் அடங்கும். அதேவேளையில், அந்தக் கூட்டணியில் இடம்பெற்ற பாரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த பசுபதிகுமாா் பாரஸ், தனது மத்திய அமைச்சா் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். அவரின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை ஏற்றுக்கொண்டாா். பிரதமரின் அறிவுறுத்தலின்பேரில், மத்திய புவி அறிவியல் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு கூடுதல் பொறுப்பாக உணவு பதப்படுத்துதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com